3.2 சோழப்பேரரசர்கள்


     சங்க காலத்திற்குப் பின்னால், மீண்டும் சோழப் பேரரசை
நிறுவினர். இவர்களது ஆட்சிகாலம் கி.பி.846 முதல் கி.பி.1279
வரை பரவியிருந்தது. நல்லாட்சியை வழங்கியதோடு, தமிழ்
இலக்கியமும், சமயமும், கல்வியும் சிறந்தமுறையில் இருந்தன.

3.2.1 தொடக்க கால அரசர்கள்

     பிற்காலச் சோழ அரசு தொடக்க காலத்தில் விஜயாலய
சோழனால் நிறுவப்பட்டது. கண்டராதித்தன் வரை அவன்
வழிவந்த வாரிசுகள் ஆட்சி செய்தனர். அதன்பின்னர்
கண்டராதித்தனின் தம்பியின் மகன் அரிஞ்சய சோழனும் அவன்
மகனாகிய இரண்டாம் பராந்தகனும் ஆண்டனர். அதற்குப் பிறகு
உத்தமசோழன் அரசாண்டான்.

     சோழப்பேரரசிற்குப் பெருமை சேர்த்தவர்களில் குறிப்பிடத்
தக்கவர்கள் முதல் இராசராசசோழனும், முதலாம் இராசேந்திர
சோழனும், முதல் இராஜாதிராஜனும் ஆவர். சோழ அரசர்களுள்
வரலாற்றுச் சிறப்புடையவர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர்.

  • விஜயாலய சோழன் (கி.பி.846-881)

     தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு பல்லவராட்சிக்குட்பட்ட
குறுநில அரசர்களாக விளங்கிய முத்தரைய அரசன்
ஒருவனை வென்று, தஞ்சையைக் கைப்பற்றிச் சோழராட்சியை
நிறுவியவன் விஜயாலயன் என்பதை, திருவாலங்காட்டுச்
செப்பேட்டு வரிகளும், கன்னியாகுமரி பகவதி அம்மன்
கோயில் கல்வெட்டொன்றும் கூறுகின்றன. தன்னுடலில் 96
விழுப்புண்களைச் சுமந்த பெருவீரனாக விளங்கிய விஜயாலயன்
ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறான். கி.பி.854ஆம்
ஆண்டில் குடமூக்கிலும், கி.பி.862இல் அரசிலாற்றங்கரையிலும்
நிகழ்ந்த பல்லவர் பாண்டியர் இடையே நிகழ்ந்த போர்களில்,
விஜயாலயன் பல்லவர்களுக்குத்     துணை புரிந்தனன் என
ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கி.பி. 880 இல் நடந்த
திருப்புறம்பியப்போர் சோழராட்சி வலிமை பெறுவதற்குப்
பெரிதும் காரணமாய் அமைந்தது.

  • முதல் ஆதித்தசோழன் (கி.பி.871-907


     விஜயாலயனின் மகனான ஆதித்தன் தன் தந்தை
காலத்திலேயே இளவரசனாகப் பொறுப்பேற்று, திருப்புறம்பியப்
போரில் சாதனைகளை நிகழ்த்தியவன். பல்லவ வேந்தன்
அபராஜிதவர்மனை     வென்று     தொண்டைமண்டலத்தைக்
கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழர்தம் ஆட்சிப் பரப்பு
விரிவடைந்தது.      கொங்குமண்டலத்தையும்     வென்று
கைப்பற்றினான். இவனுக்கு இளங்கோப்பிச்சி, திருபுவனமாதேவி
என இரு மனைவியர்களும், பராந்தகன், கன்னர தேவன் என
இரு புதல்வர்களும் இருந்தனர். கி.பி.907இல் சித்தூர்
மாவட்டம் திருக்காளத்திக்கு அருகேயுள்ள தொண்டைமான்
பேராற்றூரில்     இறந்தனன். அவனுக்காக     எடுக்கப்பெற்ற
பள்ளிப்படை (நினைவாலயம்) ஆதிச்தேசுவரம் எனும் பெயரால்
இன்றும் விளங்குகின்றது.

  • முதற் பராந்தகசோழன் (கி.பி.907-953)

     கி.பி.907இல் ஆதித்தசோழன் இறந்தவுடன் அவன் மகனான
பராந்தக சோழன் சோழப்பேரரசனாக முடிசூடிக்கொண்டான்.
இவனது ஆட்சியின் தொடக்க காலத்திலேயே தொண்டை
மண்டலமும், கொங்கு மண்டலமும் சோழப் பேரரசின்
கட்டுப்பாட்டிற்குள் திகழ்ந்தன. இவ்வேந்தன் பாண்டியன்
ராஜசிம்மனையும், ஈழத்து மன்னன் உதயணனையும் வென்று,
மதுரையும் ஈழமும் வென்ற கோப்பரகேசரி எனும் விருதுப்
பெயரினையும் பெற்றான். சிறந்த சிவ பக்தனாக விளங்கியதால்
தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து பொன்னம்பலமாக
மாற்றினான். நாடு முழுவதும் பல பெரிய ஏரிகளை வெட்டுவித்து
நீர்ப்பாசனத்துக்கு வழிவகுத்தான். பல சிவாலயங்களைக்
கற்றளியாக     (கற்கோயில்)     மாற்றினான்.     பராந்தகனது
ஆட்சிக்காலத்திலேயே அவனது மூத்த மகனான இராஜாதித்தன்
இராஷ்டிரகூடரோடு தக்கோலம் எனும் ஊரில் நிகழ்ந்த போரில்
உயிர் துறந்தான்.

  • கண்டராதித்த சோழன் (கி.பி.950-957)

     முதற்பராந்தகனின் மகன்களுள் ஒருவனான கண்டராதித்தன்
தந்தையின் இறப்புக்குப் பின்பு இராஜகேசரி எனும் பட்டத்துடன்
அரியணை அமர்ந்தார். இப்பேரரசனின்     மனைவியே
செம்பியன்மாதேவியார் ஆவார். இவ்வேந்தர் மிகுந்த சிவ பக்தியும்
அரிய செந்தமிழ்ப்புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்.
தில்லை நடராசப் பெருமான் மீது அதிக ஈடுபாடுடையவராகத்
திகழ்ந்தார். இவர் பாடிய திருப்பதிகம் ஒன்று பன்னிரு சைவத்
திருமுறைகளுள் ஒன்றான ஒன்பதாம் திருமுறையில் வைத்துப்
போற்றப்பெறுகின்றது.

     கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் திருமழபாடிக்கு அருகில்
தன் பெயரால் கண்டராதித்தச் சதுர்வேதிமங்கலம் எனும்
ஊரைத் தோற்றுவித்தார். அதுபோன்றே தென் ஆர்க்காடு
மாவட்டம் உலகபுரத்தில் கண்டராதித்தப் பேரேரி எனும் ஏரி
ஒன்றினையும் தோற்றுவித்தார். ஆழ்ந்த சைவ சமயப்
பற்றுடையவராகத் திகழ்ந்தபோதும் வைணவம், சமணம் போன்ற
மற்ற சமயங்களிடத்தும் பெருமதிப்புடையவராகத் திகழ்ந்தார்.
கண்டராதித்த விண்ணகரம் எனும் வைணவக் கோயிலை,
கண்டராதித்தம் எனும் ஊரிலும், கண்டராதித்தப் பெரும்பள்ளி
எனும் சமண ஆலயத்தை , பள்ளிச்சந்தம் எனும் ஊரிலும்
தோற்றுவித்தார். கி.பி.957இல் தன் தம்பி அரிஞ்சய சோழனிடம்
அரசுப் பொறுப்பை விடுத்துத் தம்மை முழுவதுமாக,
சைவப்பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.

  • அரிஞ்சய சோழர் (கி.பி.956-957)

     கண்டராதித்தரின் துறவு வாழ்வுக்குப் பிறகு அவரது தம்பியான
அரிஞ்சய சோழர் கி.பி.956இல் சோழ அரசராக மணிமுடி
சூடிக்கொண்டார். இவர் இளவரசராகத் திகழ்ந்த போது சோழ
மண்டலத்தின் வட பகுதியின் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டவராவார். இவரது ஆட்சி ஓராண்டே நீடித்தது
என்றும், மூன்றாண்டுகள் தொடர்ந்தது என்றும் இருவகைக்
கருத்துகள் உண்டு. தெளிவான சான்றுகள் கிடைத்தில. வட
ஆர்க்காடு மாவட்டம் ஆற்றூர் எனும் ஊரில் இவர்
இறந்தமையால் ஆற்றூர்த் துஞ்சின தேவர் என இவரைக்
கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. முதலாம் இராஜராஜசோழன் வட
ஆர்க்காடு மாவட்டம் மேற்பாடி எனும் ஊரில் இவருக்கு
அரிஞ்சயேச்சரம் எனும் பெயரில் பள்ளிப்படை ஒன்றை
எடுப்பித்தான்.

  • இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் (கி.பி.957-970)

     அரிஞ்சயன் இறந்தபிறகு அவரது மகனான பராந்தகன்
எனும் சுந்தரசோழன் கி.பி.957இல் சோழப்பேரரசனாக முடிசூட்டிக்
கொண்டான். இவன் பாண்டிய மன்னன் வீரபாண்டியனை, சேவூர்
எனும் இடத்தில் வெற்றிகண்டான். தோல்வியுற்ற பாண்டியன்
காட்டிற்குள் ஒளிந்து கொண்டமையால் 'பாண்டியனைச் சுரம் (காடு)
இறக்கின பெருமாள்' எனப் பட்டம் புனைந்துகொண்டான். சோழ
மன்னர்களின்     ஒழுகலாற்றின்படி இராசகேசரி     என்ற
பட்டத்திற்குரியவனான சுந்தரசோழன் தன்னை 'மதுரைகொண்ட
கோ. இராசகேசரிவர்மன்' எனக் கல்வெட்டுக்களில்
குறிப்பிட்டுள்ளான்.

     சிங்கள அரசன் நான்காம் மகிந்தனுடன் ஏற்பட்ட பகை
காரணமாக, தனது படைத்தலைவர் கொடும்பாளூர் பராந்தகன்
சிறியவளோன் என்பவரை ஈழநாடு சென்று போர் புரியச்
செய்தான். அப்படையெடுப்பில் சோழர் படை வெற்றிகொள்ள
இயலவில்லை. சுந்தரசோழர் பேரரசராய் ஆட்சிபுரியும் போது
அவரது மூத்த மகன் ஆதித்தகரிகாலன் கி.பி.966இல் இளவரசாகப்
பட்டம் ஏற்றான். சுந்தரசோழரின் இரண்டாம் மகனே
பின்னாளில் சோழராட்சியில் பொற்காலத்தை உருவாக்கிய முதலாம்
இராஜராஜன் அருண்மொழியாவான். பாண்டியர்களுடன் ஏற்பட்ட
பகை காரணமாக கி.பி.969இல் இளவரசன் ஆதித்தகரிகாலன்
நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டான். அதற்கு அவனது உயர்
அலுவலர் சிலர் உறுதுணையாய் இருந்தது பின்னாளில்
தெரியவந்தது. மகனை இழந்த சுந்தரசோழர் கி.பி.970 இல்
மரணமுற்றார். அப்போது அவரது தேவியான வானவன்மாதேவி
தீப்பாய்ந்து உயிர் துறந்தாள்.

  • மதுராந்தக உத்தமசோழர் (கி.பி.970-985)

     கண்டராதித்தசோழர், செம்பியன்மாதேவியார் ஆகிய சோழ
அரச தம்பதியர்க்கு மகனாய்ப் பிறந்த உத்தமசோழர் கி.பி.970- இல்
சோழப் பேரரசராக மணிமுடி சூடிக்கொண்டார். ஆதித்தகரிகாலன்,
சுந்தரசோழர் ஆகியோர் மறைவுக்குப் பின்பு சோழநாட்டு மக்களும்,
கண்டராதித்தர் மனைவியாரும் உத்தமசோழரின் தாயாருமான
செம்பியன்மாதேவியாரும், உயர் அலுவலர்களும் சுந்தரசோழரின்
இரண்டாம் மகனான அருண் மொழியே (முதலாம் இராஜராஜன்)
சோழப் பேரரசனாக விளங்க வேண்டும் என்று விரும்பியபோது.
முறையான வாரிசான உத்தமசோழருக்கே பட்டம் சூட்டவேண்டும்
எனக்கூறி உத்தமசோழரைப் பட்டம் ஏற்கச் செய்தவன்
அருண்மொழியே ஆவான்.

     கோப்பரகேசரி மதுராந்தக உத்தமசோழரின் ஆட்சிக்காலத்தில்
குறிப்பிடத்தக்க போர்கள் நிகழ்ந்ததாகச் சான்றுகள் ஏதும் இல்லை.
அமைதியான நல்லாட்சியைத் தந்த அவரும் அவரது தாயார்
செம்பியன்மாதேவியாரும்     இணைந்து பல கற்கோயில்களை
உருவாக்கினர். தமிழகக்கோயில் வரலாற்றில் இவர்களது தொண்டு
நீங்கா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

3.2.2 வரலாற்றுச் சிறப்புடைய அரசர்கள்


     தமிழகக் கட்டக்கலையின் சிகரமாகத் திகழ்வது தஞ்சைப்
பெரியகோயில், இதைக்கட்டிய பெருமை முதல் இராசராச
சோழனைச்சாரும். தன் வீரத்தாலும் படைபலத்தாலும் வங்காள
தேசம் வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றவன்
முதலாம் இராசேந்திரசோழன். இவனது மகன் முதல் இராஜராஜனும்
தந்தையைப் போல் வீரம் வாய்ந்தவன். சாளுக்கியரின்
தலைநகரைக் கைப்பற்றிய பெருமை இவனுக்கு உண்டு, இத்தகைய
மன்னர்களும் அவர்கள் வழி வந்தவர்களும் சோழப் பேரரசின்
வரலாற்றுச் சிறப்புடைய மன்னர்களாகத் திகழ்ந்தனர்.

  • முதல் இராசராசசோழன் (கி.பி.985-1014)

     உத்தமசோழரின் ஆட்சி கி.பி.985 - இல் நிறைவுற்ற பிறகு,
சுந்தரசோழரின் இரண்டாம் மகனான அருண்மொழி சோழப்
பேரரசனாக கி.பி.985-இல் முடிசூடிக் கொண்டார். அப்போது முதல்
கோராஜகேசரி இராஜராஜன் என அழைக்கப்பட்டார். பெரிய
பாட்டி செம்பியன் மாதேவியார், தமக்கை குந்தவையார்
ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்த இராசராசன் ஆற்றல்
மிக்கவராய் விளங்கினார். சோழ இராஜ்யத்தின் பரப்பு இவரது
ஆட்சிக்காலத்தில் மிகவும் விரிவடைந்தது. காந்தளூர்ச்சாலை,
வேங்கைநாடு, தடிகைபாடி, குடமலைநாடு, கொல்லம், கலிங்கம்,
ஈழமண்டலம், இரட்டபாடி, ஏழரை இலக்கம் போன்ற
நாடுகளை எல்லாம் வென்று வீரம் மிக்கவராய் விளங்கினார். தானே
போர் மேற்சென்று கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனையும்,
மேலைச் சாளுக்கிய மன்னன் சத்யாச்ரனையும் வெற்றி
பெற்றவர். இவரது ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டின் வருவாய்
பெருகிற்று. தன் நாடு முழுவதையும் துல்லியமாக அளக்கச்
செய்து, நிலத்தின் தரங்களைப் பகுத்து, ஆவணப்படுத்தினார்.
இந்திய வரலாற்றிலேயே முறையான நில அளவை முறையை
முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.

     இவரது சாதனைகளுள் குறிப்பிடத்தக்கது உலகப்புகழ் வாய்ந்த
தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்ததாகும். சிறந்த
சைவப்பற்றாளராக விளங்கியபோதும் எல்லாச் சமயங்களையும்
ஒரே நிலையில் மதித்த பண்புடன் திகழ்ந்தவர். கடாரத்து
அரசன் சூளாமணிவர்மனால் தொடங்கப்பெற்று, அவன் மகன்
விஜயோத்துங்கவர்மனால் நாகப்பட்டினத்தில் கட்டிமுடிக்கப்பெற்ற
புத்த விகாரத்திற்கு 'இராஜராஜப்பெரும்பள்ளி' என்று தன்பெயரைச்
சூட்டி மகிழ்ந்ததோடு அதற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் எனும்
ஊரையும் அளித்தார். தனது கல்வெட்டுச் சாசனங்களில்
மெய்க்கீர்த்தி எனும் புதிய அமைப்பை அறிமுகம் செய்து,
அதன்மூலம் மன்னர்களின் உண்மை வரலாற்று நிகழ்வுகளைப்
பதிவு பெறுமாறு செய்தார். இராஜராஜனின் ஆட்சி மாமன்னரின்
நேரடி ஆட்சி என்ற போதும், அது உண்மையிலேயே மக்களாட்சித்
தத்துவத்தை மலரச் செய்த ஒரு ஆட்சிமுறையே ஆகும். நிர்வாக
அமைப்பில் மக்கள் பிரதிநிதித்துவத்திற்கு முக்கிய பங்கு
இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இவருக்கு இராஜேந்திரசோழன்
என்ற ஒரு மகனும், இரு மகள்களும் இருந்தனர்.


முதல் இராசராசசோழன்


  • முதலாம் இராஜேந்திரசோழன் (கி.பி.1012-1044)

    பூர்வதேசமும் கங்கையும் கடாரமும்     கொண்ட
கோப்பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுகளால் புகழப்படும்
முதலாம் இராசராசசோழனின் மறைவுக்கு ஈராண்டுகள் முன்பு
கி.பி.1012இல் இளவரசாகப் பட்டம் புனைந்து, பின்பு
மாமன்னனின் மறைவுக்குப் பிறகு 1014இல் சோழ
சாம்ராஜ்யத்தின்     சக்ரவர்த்தியாக     இராஜேந்திரன்
முடிசூடிக்கொண்டான். இவனது ஆட்சியின் முதற்பத்தாண்டுகள்
தஞ்சையைத் தலைநகராகக் கொண்டிருந்தது. கொள்ளிடத்திற்கு
வடபால் கங்கைகொண்ட சோழபுரம் எனும் பெயரில் ஒரு புதிய
தலைநகரை இப்பேரரசன் உருவாக்கினான். பின்பு ஏறத்தாழ
1024இல் தஞ்சையை விடுத்து, கங்கை கொண்டசோழபுரத்தையே
நிரந்தரத் தலைநகரமாக்கினான்.

     மாபெரும் வீரனாகத் திகழ்ந்த இப்பேரரசன் தன் படை
பலத்தால் வங்காள தேசம் வரை படை எடுத்து
வெற்றிக்கொடி நாட்டினான். கங்கையிலிருந்து கொணர்ந்த நீரினைத்
தன் தலைநகரத்தில் வெட்டுவித்த 'சோழகங்கம்' எனும் ஏரியில்
நிரப்பி வெற்றிவிழா எடுத்தான். சிறந்ததொரு கடற்படையின்
துணைகொண்டு கீழ்த்திசை நாடுகளுள் ஒன்றான கடாரத்து
அரசனாகிய சங்கிராமவிசயோத் துங்கவர்மனைப் போரில் வெற்றி
கண்டு, அவனது பட்டத்து யானையையும், பெரும் பொருளையும்
வித்யாதர தோரணத்தையும் கவர்ந்ததோடு, ஸ்ரீவிசயம் (சுமத்ரா
தீவிலுள்ள பாலம்பாங்பகுதி), பண்ணை (சுமத்ரா தீவிலுள்ள
பனை), மலையூர் (சுமத்திராவின் மற்றொரு பகுதி), மாயிருடிங்கம்
(மலேசியாவிலுள்ள ஜிலோடிங்), இலங்காசோகம் (மலேயாவிலுள்ள
கெடா பகுதி), பப்பாளம் (கிரா பகுதியிலுள்ள இஸ்துமஸ்),
இலம்பகம், வளைப்பந்தூர், தக்கோலம் (தகோபா), தாமலிங்கம்
(மலேயா நாட்டிலுள்ள தெமிலிங்), இலாமுரிதேசம் (சுமத்திராவின்
வடபகுதி), நக்கவாரம் (நிக்கோபார் தீவுகள்) ஆகிய நாடுகளை
வெற்றிகொண்டதாக இராஜேந்திரசோழனின்     கல்வெட்டுகள்
கூறுகின்றன. பிற்காலச் சோழ அரசர்களுள் இராஜேந்திரசோழன்
காலத்தில்தான் சோழசாம்ராஜ்யம் மிகவும் விரிவடைந்திருந்தது.

     தான் புதிதாகத் தோற்றுவித்த கங்கைகொண்ட சோழபுரம்
எனும் தலைநகரில் கங்கைகொண்ட சோழேச்சரம் எனும்
மிகப்பெரிய சிவாலயத்தைக் கட்டி, சைவ     சமயத்திற்கும்
கலைத்துறைக்கும் மிகுந்த சேவை புரிந்தான். புறச்சமயத்தவரிடம்
அன்பு காட்டினான் என்பதை அவனது கல்வெட்டுச்சாசனங்கள்
எடுத்துக்கூறுகின்றன. இவனது மகன்களான இராஜாதிராஜன்,
இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகிய மூவரும் தம்
தந்தையின் வெற்றிகளுக்குக் காரணமாகத்     திகழ்ந்ததோடு,
இப்பேரரசனின் மறைவுக்குப் பின்பு ஒருவர்பின் ஒருவராக
ஆட்சிப்பொறுப்பை ஏற்றுச் சோழர் மரபிற்குப் புகழ் சேர்த்தனர்.

• முதல் இராஜாதிராஜன் (கி.பி.1018-1054)

     கங்கைகொண்ட சோழனான முதல் இராஜேந்திரசோழனின்
மூத்த மகனான முதல் இராசாதிராசன் தன் தந்தை பேரரசனாகத்
திகழும்போதே, கி.பி.1018இல் இராசகேசரி என்ற பட்டத்தோடு
இளவரசனாக முடிசூடிக்கொண்டான். தன் தந்தையின் ஆட்சிக்கு
உறுதுணையாக விளங்கிய இவன், கங்கை கொண்ட சோழனின்
மறைவிற்குப் பிறகு கி.பி.1044இல் சோழப் பேரரசனாக
முடிசூடிக்கொண்டான். பாண்டிமண்டலம், ஈழநாடு முதலியவற்றை
வெற்றிகண்ட இராசாதிராசன் மேலைசாளுக்கிய நாட்டிற்குப்
பலமுறை போர்மேற்சென்று வாகை சூடினான்.

     சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி
அங்கிருந்து வெற்றிச்சின்னமாகக் கொணர்ந்த துவாரபாலகர் சிலை
ஒன்றைச் சோழ நாட்டில் காட்சியாக வைத்து, அதன் பீடத்தில் தன்
வெற்றிச் செய்தியைக் கல்வெட்டாகவும் பொறித்தான். கி.பி.1054-இல்
தன்தம்பி இரண்டாம் இராஜேந்திரனுடன் மீண்டும் மேலைச்
சாளுக்கிய நாட்டின் மீது படை எடுத்தான். கிருஷ்ணையாற்றங்
கரையிலுள்ள கொப்பம் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன்
ஆகவமல்லன் என்பானுடன் கடுமையாகப் போர் புரியும்போது
வீரமரணம் அடைந்தான். பட்டத்து யானை மீது அமர்ந்து போர்
புரியும்போது இறந்ததால் யானைமேற்துஞ்சினதேவர் என்று
வரலாற்று ஏடுகளில் குறிக்கப்பட்டான். எனினும் அப்போரில்
இவரது தம்பி இரண்டாம் இராஜேந்திரன் கடும் போர்புரிந்து
வெற்றிவாகை சூடினான்.

• இரண்டாம் இராசேந்திரசோழன் (கி.பி.1051-1063)

     கங்கைகொண்ட இராசேந்திரசோழனின் இரண்டாம் மகனான
இரண்டாம் இராசேந்திரசோழன் தன் தமையன் இராசாதிராசன்
கொப்பத்துப் போரில் கி.பி.1054இல் யானைமீது இறந்தபோது,
அப்போர்க்களத்திலேயே சோழசாம்ராஜ்யத்திற்குச் சக்கரவர்த்தியாக
முடிசூடிக்கொண்டான் என்பதை இவனது கல்வெட்டுகள் எடுத்துக்
கூறுகின்றன. இதனை, கலிங்கத்துப்பரணி,

'ஒரு களிற்றின்மேல் வருகளிற்றையொத் (து)
உலகு யக்கொளப் பொருது கொப்பையிற்
பொருகளத்திலே முடிகவித்தவன்'

என்று கூறுகின்றது. இவ்வேந்தன் கொப்பத்துப் போரில் ஆயிரம்
களிறுகளை (யானைகளை)க் கைப்பற்றியவன் என்பதை,

'வெப்பத் தடுகளத்து வேழங்கள் ஆயிரமும்
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டோனும்'

என்று     கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்     மூவருலாவில்
குறிப்பிட்டுள்ளார்.     இவன்     ஈழநாட்டை வென்றதோடு,
மேலைச்சாளுக்கியரோடு இரண்டாம் முறை முடக்காற்றூரில் போர்
தொடுத்து வென்றவன்.

• வீரராசேந்திரன் (கி.பி.1063-1070)

     கங்கைகொண்ட இராசேந்திரசோழனின் மூன்றாம் புதல்வனாகிய
வீரராசேந்திரன் தன் தமையன் இரண்டாம் இராசேந்திரசோழனின்
மறைவுக்குப் பிறகு சோழப் பேரரசனாக இராசகேசரி என்ற
பட்டத்துடன் முடிசூடிக்கொண்டான். இவன் கூடலசங்கம் எனும்
இடத்தில் மேலைச்சாளுக்கியருடன் போர் புரிந்து வெற்றி
கண்டவனாவான். தன் உடன்பிறந்தவர்களைப் போன்றே
கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு நல்லாட்சி
செய்தான். கி.பி.1070இல் இப்பெருவேந்தன் மரணமுற்றதால் உடன்
அவனது புதல்வன் அதிராஜேந்திரன் சோழப் பேரரசனாக, பரகேசரி
எனும் பட்டம் புனைந்து ஆட்சிபீடம் அமர்ந்தான். அதே ஆண்டில்
உடல்நலக் குறைவால்     மரணமுற்றான். விஜயாலயசோழன்
காலத்திலிருந்து தொடர்ந்த தந்தைவழி அரச உரிமை மரபு
இந்நிலையில் நிறைவு பெற்றது.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)

சோழநாடு பற்றிக் குறிப்பிடும் யவன ஆசிரியர்
யார்?

(விடை)
2) முற்காலச் சோழ அரசர்களில் இருவர் பெயர்
கூறுக.
(விடை)
3) தெலுங்குச் சோழர்கள் யார்?
(விடை)
4) பிற்காலச் சோழர்களின் இரு கிளையினர் யார்?
(விடை)
5)
சோழர் வரலாறு அறிய உதவும் மூலங்கள்
யாவை?
(விடை)
6)
திருப்புறம்பியப் போரில் வெற்றிபெற்றவர் யார்?
7)
சோழர் காலத்தில் எழுந்த நூல்கள் யாவை?
(விடை)