6.2 இக்காலச் செய்யுள் இலக்கியங்கள்

    இக்காலத் தமிழ்ச் செய்யுள் இலக்கியத்தை வளப்படுத்தியதில்
இஸ்லாமியக் கவிஞர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. மரபுக்
கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் தமிழ் மரபையும்,
பண்பையும் பின்புலமாகக் கொண்டு பாடியுள்ளனர்.

6.2.1 மரபுக் கவிதை

    பழைய மரபைப் பின்பற்றி மிகச்சிறந்த மரபுக் கவிதைகளைப்
பாடிய பெருமை, சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், சாரண
பாஸ்கரன், கவி. கா. மு. ஷெரீப் போன்றோரைச் சாரும்.

  • செய்கு தம்பிப் பாவலர்
  •     இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களுள் குறிப்பிடத்தக்க
    சாதனையாளர், 1876இல் நாஞ்சில் நாட்டில் பிறந்த சதாவதானி
    செய்கு தம்பிப் பாவலர். வள்ளலாரின் அருட்பாவை மருட்பா
    என்று கூறியவர்களுக்கு எதிராக வாதாடியவர். மறைமலை
    அடிகள் திரு.வி.க ஆகியோரால் போற்றப்பட்டவர். இவர் பாடிய
    செய்யுள் இலக்கியங்கள்: சம்சுத்தாசீன் கோவை, திருநாகூர்
    திரிபந்தாதி,      திருக்கோட்டாற்றுப்      பதிற்றுப்பத்தந்தாதி,
    நபிகள் நாயக     மான்மிய மஞ்சரி, நீதிவெண்பா,
    அழகப்பக்கோவை ஆகியன.

        சிலேடையாகப் பாடல் இயற்றுவது என்பது மிகவும்
    கடினமான ஒன்று. நல்ல புலமையும், சொற்களைக் கையாளும்
    திறமையும், கூர் அறிவும் உடையோரே அத்தகைய பாடல்களை
    இயற்ற இயலும். ஒரு சிலரே சிலேடைக் கவிஞர்களாகப் புகழ்
    பெற்றுள்ளனர். அவர்களுள் செய்கு தம்பிப் பாவலரும் ஒருவர்.
    அவரது புலமையையும் நினைவு ஆற்றலையும் அடிப்படையாகக்
    கொண்டு, ‘சதாவதானி’ என்னும் பட்டம் அவருக்கு
    வழங்கப்பட்டது.

    ¥ சதாவதானம்

    ‘சதம்’ என்றால் நூறு என்று பொருள். ஒருவரது
    புலமையையும், நினைவாற்றலையும்,      நுண்அறிவையும்
    சோதிப்பதற்காக நடத்தப்படும் சோதனைகளில் ஒன்று
    சதாவதானம். சோதனைக்கு உரியவரிடம் ஒரே நேரத்தில் பலரும்
    பங்கு கொண்டு பல கேள்விகளைக் கேட்பார்கள். புலவரைச்
    சுற்றிலும் மணியடித்தல், மலர் எறிதல் போன்ற நிகழ்ச்சிகள்
    நடந்துக் கொண்டிருக்கும். இவை நூறு விதமானவையாக
    இருக்கும். இவை அனைத்தையும், நினைவில் வைத்துக் கொண்டு
    இறுதியில் ஒவ்வொன்றிற்கும் பதில் தரவேண்டும். சில பதில்கள்
    கவிதையில் சொல்லப்பட வேண்டியிருக்கும். இதற்கு மிகுந்த
    நினைவாற்றலும் திறமையும் தேவைப்படும்

        அத்தகைய சதாவதான நிகழ்ச்சியில் செய்கு தம்பிப்
    பாவலரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று ‘எல்லாச் சமயக்
    கடவுளையும் சுட்டும் வகையில் ஒரே வரியில் ஒரு கவிதை
    கூறுங்கள்’ என்பதாகும். உடனே பாவலர், சிலேடையாக,

    சிரமாறுடையான்
    - என்று பாடினார். இதனைச்
    சிரம் ஆறுடையான்
    - என்றும்
    சிரம் மாறுடையான்
    - என்றும் பிரிக்கலாம்.

    (சிரம் = தலை, தலைமை; ஆறு = நதி (River); ஆறு = எண்: 6
    (Number); ஆறு = நெறி மாறு = மாறியிருத்தல்)

    இத் தொடருக்குரிய பொருள்கள் வருமாறு:

    (1) தலையிலே கங்கை ஆற்றை உடைய சிவபெருமான்
    (2) தலையிலே ஆறுமுகங்களை உடைய முருகன்
    (3) தலையிலே மாறுபட்ட முகத்தை உடைய கணபதி
    (சிரம் + மாறு = சிரமாறு உடையான். அதாவது மாறுபாடான
    முகம் உடையான்)
    (4) தலையாய நெறிகளை உடைய அல்லா அல்லது இயேசு
    அல்லது புத்தர்

        மேற்குறிப்பிட்ட பொருளை விளக்கிக் கூறி அனைவரது
    பாராட்டையும் பெற்றவர் சதாவதானி செய்கு தம்பிப் பாவலர்.

        இதைப்போலவே மேலும் பல சிலேடைப் பாடல்களை
    எளிமையாகப் பாடிப் புகழ் பெற்றவர் கவிஞர் செய்கு தம்பிப்
    பாவலர்.

    ¥ சாரண பாஸ்கரன்

        1950ஆம் ஆண்டிற்குப்பின் அமைந்த மறுமலர்ச்சிக்
    காலத்தில் முதலில் வந்த இஸ்லாமியத் தமிழ்க்காப்பியம் யூசுப்-
    ஜுலைகா ஆகும். இதனை இயற்றியவர் சாரண பாஸ்கரன். இவரது
    இயற்பெயர் டி.எம்.எம். அஹமத்.

        1957இல் வெளிவந்த      இக்காப்பியம், குரானிலும்,
    விவிலியத்திலும் சொல்லப்படும் இறைத்தூதர்களுள் ஒருவரான
    யூசுப் நபியின் வரலாற்றைக் கூறுவது. சகோதரர்களால்
    வஞ்சிக்கப்பட்ட யூசுப் நபி, படிப்படியாக உயர்ந்து, எகிப்து
    அரசில் பெரிய அதிகாரியாக ஆகித் தன் சகோதரர்களை
    மன்னித்துத் தன்னோடு வைத்துக் கொண்டதும், ஜுலைகா
    என்னும் எகிப்திய நங்கையை மணந்து கொண்டதும் ஆகிய
    வரலாறு 66 இயல்களில் விரிவாகப் பாடப்பட்டுள்ளது.

    ¥ கவி. கா. மு. ஷெரீப்

        இஸ்லாமியக் கவிஞர்களுள் மக்களிடம் மிகுந்த செல்வாக்குப்
    பெற்றவர் கவிஞர் கவி. கா. மு. ஷெரீப். திரை இசைப் பாடல்கள்
    வாயிலாக அறிமுகமான இக்கவிஞர், நபியே எங்கள் நாயகமே
    எனச் சதக முறைக் காவியம் ஒன்றை எழுதினார். மேலும்,
    அந்தாதி வடிவத்தில் ஆன்மகீதம் என்ற நூலையும், மச்சகந்தி
    (பீ்ஷ்மசபதம்) என்ற குறுங்காவியத்தையும் இயற்றினார்.

    தாம் பாடிய கவிதைகளைத் தொகுத்து, கவி. கா. மு. ஷெரீப்
    கவிதைகள் என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

    ¥ தேசியக் கவிஞர்கள்

        ஐரோப்பியரின் ஆட்சியை அகற்றும் பணியில் பாடுபட்ட
    பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தியடிகள் ஆகியோரின்
    கோட்பாடுகள் யாவும் இக்காலத்தின் முதல் கட்டத்தில்
    இஸ்லாமியத்தமிழ்ப் புலவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

        காதர் முகைதீன் மஸ்தான் புலவரின் கள்குடி அகற்றும்
    அலங்காரம், என்.ஏ. அப்துல் லத்தீப்பின் இந்திய தேசிய
    அபிமானச் சிந்து, பீர் முகம்மது ராவுத்தரின் கதர் ஆனந்தக்
    களிப்பு, கம்பம் பீர் முகம்மதுப் பாவலரின் காந்தி மாலிகை,
    அசன் மோதின் தேசிய கீதம், கே.எம் அல்லாப்பிச்சை ராவுத்தர்
    தேசிய திலகர் மாலிகை, காசிம் புலவர் சர்வ சமய கீர்த்தனை
    போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.

        சமயம், சமயக் கோட்பாடுகள் எனக் குறிக்கோளோடு
    வாழ்ந்த இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள், விடுதலை
    வேள்விக்கடலில் சங்கமமானார்கள். இவர்கள் பொன்னேபோல்
    போற்றத் தக்கவர்கள் அல்லவா?

    ¥ சமயம் பற்றிப் பாடிய கவிஞர்கள்

        போடிப்புலவர் கான்முகம்மது, இறைவனின் 99 நாமங்களை
    விளக்கி இனிய சந்தத்தில் கொள்கைமணிக்கோவை என்ற (மூன்று
    தொகுதிகளையுடைய) நூலைப் படைத்தார். புத்தர் வரலாற்றை
    ‘ஆசியச்சுடர்’ என்னும் காவியமாக்கித்தந்தார்.

        மறுமலர்ச்சிக் காலத்தில், தொடக்க கால இஸ்லாமிய
    இலக்கியங்கள் சில புதிய வார்ப்புப் பெற்றுள்ளன. பனைக்குளம்
    மு. அப்துல் மஜிதுப் புலவர் நாயக வெண்பா படைத்துள்ளார்.
    சீறாப்புராணமும் சின்னசீறாவும் இதன் உள்ளடக்கம் எனலாம்.
    இதனைத் தொடர்ந்து அண்மையில் எம்.ஆர்.எம். அப்துல் ரஹீம்,
    நபிகள் பெருமானாரின்      வரலாற்றைக் காவியமாகப்
    படைத்துள்ளார். சித்திரக்கவி அலமுநூர் இவ்வரலாற்றை ஞான
    ஒளிச்சுடர்
    எனத் தந்துள்ளார்.

        நபிகள் பெருமானார் மற்றுமுள்ள இறைநேசர்களைப்
    பிள்ளைத்தமிழாகப் பாடும் பழைய போக்கு வள்ளல்களைப்
    பாடும் நிலையில் திரும்பி உள்ளது. நாஞ்சில் ஆரிது பாளையம்
    கே.சி.எம். பிள்ளைத்தமிழ்,
    புலவர் எஸ்.எம். . காதர்
    வள்ளல் சீதக்காதி பிள்ளைத்தமிழ்
    ஆகியவற்றைப்
    படைத்துள்ளனர்.

        காரை இறையடியான் (1935-1994) நபிகள் பெருமானார்
    நவின்ற நல்லுரைகள் இரண்டாயிரத்தைத் தொகுத்துக் குறள்
    வெண்பா யாப்பில் நபிமொழிக்குறள் என்னும் நூலைப்
    படைத்துள்ளார். இந்நூல் பத்தொன்பது இயல்களையும் இருநூறு
    அதிகாரங்களையும் கொண்டுள்ளது. சான்றுக்கு ஒருகுறள்:

        அறபு நாட்டிலிருந்து நோக்கச் சீனநாடு நெடுந்தொலைவில்
    உள்ளது. கல்வியின் இன்றியமையாமையை நோக்கிய நபிகள்
    பெருமானார், ‘எத்தகைய தொலைவில் கல்வி கிடைத்தாலும்
    அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற கருத்தில்,

        சீனா சென்றாகிலும் கல்வி கற்றுக் கொள்க

    என்றார். இதனைக் காரை. இறையடியான்,

    சீனத்தில் கல்வி செழிப்பெனினும் சென்றதனைத்
    தானோடிக் கற்றல் தலை
    (நபிமொழிக் குறள். எண் - 1551)

    எனப் பாடியுள்ளார்.

        தனித்தமிழ் இயக்கச் சிந்தனையாளராகிய காரை.
    இறையடியான், கன்னித் தமிழ் வளர்த்த காரைக்கால்
    அம்மையார், திருவருட்பாவை, திருநபி இரட்டை
    மணிமாலை, அறிவியல் ஆத்திசூடி, கல்லறைக் காதல்,
    செந்தமிழ்த் தொண்டர்     ஆற்றுப்படை
    முதலான
    நூல்களையும் இயற்றியுள்ளார். இவருடைய தமிழமுதம் என்னும்
    நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது. இளந்தென்றல் என்னும்
    நூல் குழந்தை இலக்கியப் போட்டியில் பரிசு பெற்றது.
    கவிமாமணி என இவர் போற்றப்பட்டார்.

    6.2.2 புதுக்கவிதை

        புதுயுகத்தின் தேவைகளான மனிதாபிமானம், சர்வதேசியம்
    போன்றன புதுக்கவிதையின் கருப்பொருள் ஆகும். குறிப்பாக,
    சமூகப்பார்வை கொண்ட மனிதாபிமானப் போக்கினையும், சாதிமத
    பேதங்களைக் கடந்த     பொதுமைப் போக்கினையும்
    புதுக்கவிதைகள் கொண்டுள்ளன.

        புதுக்கவிதை உலகில் சாதனை படைத்தவர்களாக கவிக்கோ.
    அப்துல்ரகுமான், மு. மேத்தா, இன்குலாப், அபி முதலான
    பலரைக் காண்கிறோம். இவர்களுடைய கவிதைகளில் இஸ்லாமியப்
    புராணவியல், மரபியல் படிமங்களைக் காட்டிலும் இந்தியப்
    புராணவியல், மரபியல் படிமங்களே மேலோங்கி நிற்கின்றன.

    ¥ கவிக்கோ. அப்துல் ரகுமான்

        மதுரையில் 1937ஆம் ஆண்டு பிறந்தவர். வாணியம்பாடி
    இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப்
    பணியாற்றியவர். பால்வீதி, நேயர்விருப்பம் சுட்டுவிரல்,
    ஆலாபனை முதலிய கவிதை நூல்களையும், இன்றிரவு பகலில்,
    அவளுக்கு நிலா என்று பெயர், கரைகளே நதியாவதில்லை,
    சலவை மொட்டு முதலான கவிதைத் திறனாய்வு நூல்களையும்
    படைத்துள்ளார்.

        தமிழ்நாடு அரசின்      பாரதிதாசன் விருதும்,
    தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருதும் பெற்றுள்ளார்.
    இவருடைய ஆலாபனை என்னும் நூல் சாகித்ய அகாதெமி
    பரிசுபெற்றுள்ளது.

    ஆலாபனை கவிதைத் தொகுப்பிலுள்ள ஒரு கவிதையை
    நோக்குவோம்.

    தற்செயலாக ஒரு நாள் தொலைபேசியில் தவறான எண்ணில்
    இறைவன் சிக்கிக் கொள்கிறான். கவிக்கோ கேட்கிறார்.

    இங்கே என்ன நடக்கிறது என்றுபார் !
    இதோ உனக்கு வீடுகட்டுவதற்காக
    உன் வீட்டை இடிக்கும் மூடர்கள்!
    இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா?
    கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா?

    அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட வரலாற்றைத்
    தொடர்கிறார்.

    இந்த ராமர் யார்? ரஹீம் யார் !
    பெயரால் அல்லவா இத்தனைப் பிரச்சனை
    பெயர்களில் நீ இருக்கிறாயா?

    எனக் கேட்கிறார்.

    கடைசியாகக் கேட்கிறேன்
    நீ இந்துவா? முஸ்லிமா?

    அவ்வளவு தான்

    ராங் நம்பர் என்ற பதிலோடு
    இணைப்பு துண்டிக்கப்படுகிறது

    கடவுளைக் கட்டடங்களுக்குள்ளும் மத வேலிகளுக்குள்ளும்
    அடைக்க முயலும் அறிவின்மையையே இப்பதில் உணர்த்துகிறது.

    ¥ மு. மேத்தா

        புதுக்கவிதை உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துக்
    கொண்டவர் மேத்தா ஆவார். 1945ஆம் ஆண்டு மதுரை
    மாவட்டத்திலுள்ள பெரியகுளம் என்னும் ஊரில் பிறந்தவர்.
    சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர். கண்ணீர்ப்
    பூக்கள், ஊர்வலம், மனச்சிறகு, அவர்கள் வருகிறார்கள்,
    முத்துமுகம் முதலான முப்பது நூல்களை எழுதியுள்ளார்.
    புதுக்கவிதையில் நபிகள் பெருமானாரின் வரலாற்றை - நாயகம்
    ஒரு காவியம் எனப்படைத்துள்ளார். தமிழக அரசின் பாரதிதாசன்
    விருது பெற்றுள்ளார்.

    இவருடைய காற்றை மிரட்டிய சருகு என்னும் தலைப்பில்
    சிலவரிகள்:

    சாதி -
    மனிதன் தன்முகத்தில்
    தானே பூசிக் கொண்ட கரி !
    அதனால் இது -
    பிறவினை அல்ல
    தன்வினை !
    இதனால் -
    செயப்படுபொருள்
    பிரிவினை !

        எனத் தமிழ் இலக்கண மரபினைக் கொண்டு சாதியின்
    கொடுமையைக் காட்டுகின்றார்.

        கவிக்கோ அப்துல் ரகுமான், மேத்தா இவர்களைப் போலவே
    இன்குலாப், அபி போன்றோரும் புதுக்கவிதை உலகில் நிலை
    பெற்றோர் ஆவர்.

    ¥ இன்குலாப்

    ஷாகுல் ஹமீது என்னும் இயற்பெயருடைய கவிஞர்
    இன்குலாப்     தமிழ்ப் புதுக்கவிதையில் புரட்சிகரமான
    கருத்தோட்டங்களை நிரப்பியவர். இவருடைய இன்குலாப்
    கவிதைகள், வெள்ளை இருட்டு, ஆக்டோபஸ் போன்ற கவிதைத்
    தொகுப்புகள் ஒடுக்குமுறைக்கு இலக்காகும், பல்வேறு
    வகைப்பட்ட எளிய மக்களின் நிலைகளைக் கூறுவது மட்டுமன்றி,
    அவர்களைத் தலைநிமிர்ந்து போராடி, கை விலங்குகளை
    உடைக்கத் தூண்டுவனவாகவும் அமைகின்றன. மார்சீயக்
    கோட்பாடுகளும், தமிழ்த் தேசிய உணர்வும், மனிதாபிமானமும்
    இவர் கவிதைகளின் அடிநாதமாகும். விபசாரியைப் பற்றிக்
    கண்டனமாகவும் இகழ்ச்சியாகவும் எழுதப்பட்ட கவிதைகளின்
    இடையே, இன்குலாப் எழுதிய கீழ்க்குறிப்பிடும் இரண்டு வரிக்
    கவிதை இவருடைய     ஆழ்ந்த மனிதாபிமானத்தை
    வெளிப்படுத்துகிறது. விபசாரியின் கல்லறை வாசகம் வருமாறு:

    மரணமாவது இவளைக்
    கபன்துணியால் கௌரவப்படுத்தியது

    (கபன் துணி = அடக்கம் செய்வதற்காக உடலைப் போர்த்தும்
    துணி)

    ¥ அபி

        தமிழ்க் கவிதையின் தனித்தன்மையான ஒரு போக்கை
    அபியிடம் காணலாம். உணர்வுகளின் நுட்பமான, அருவப் பிறப்பு
    நிலைகளைக் (abstract) கவிதையாக வடிப்பவர் இவர்.
    கவிதைகளின் வாயிலாக அனுபவத்தைத் தாண்டிய நிலையையும்,
    இருப்பின் முடிவின்மையையும் தேடுகிறவர் இவர். சமயம்,
    தத்துவம் சாராத ஆன்மீகமே இவர் கவிதைகளின் அடிப்படை
    எனலாம். மௌனத்தின் நாவுகள், அந்தரநடை, என்ற ஒன்று
    ஆகியவை இவரது கவிதைத் தொகுதிகள் ஆகும். இவரது
    ‘தெளிவு’ என்ற கவிதை இந்தப் பிரபஞ்சப் பெருவெளி
    அனுபவங்கள் எல்லாவற்றையும் தாண்டித் தெளிவு காணமுயன்று,
    ‘தெளிவு’ என்பது இல்லாத பொருள் என்ற முடிவுக்கு வந்து
    சேர்கிறது. ஆனால் இந்தத் தேடலின் பரவசம் மகத்தானது.
    அதனை,

    தனித்தலின் பரவசம்
    அனுபவத்தின் கையிருப்பில்
    அடங்காது
    நழுவி
    விரிவு கொண்டது

    என்று குறிப்பிடுகிறார் அபி.


    1. இக்கால இஸ்லாமிய இலக்கியத்தைக் கால
    அடிப்படையில் எத்தனை பிரிவுகாளகப் பிரிக்கலாம்?
    2. சிலேடையைச் சமய நல்லிணக்கத்துக்காகப்
    பயன்படுத்திய இஸ்லாமியப் புலவர் யார்? எவ்வாறு?
    3. ‘நபிமொழிக் குறள்’ எனும் நூலின் உள்ளடக்கம் யாது?
    4. நீ இந்துவா? முஸ்லிமா? என்ற அப்துல் ரகுமானின்
    கேள்விக்குக் கடவுள் தந்த பதில் என்ன?