| அகத்திணை
என்பது தமிழர் கண்ட காதல் நெறி;
தமிழ்மொழி இலக்கியங்களில் காணப்படும் காதல் வாழ்வு, உலக
மக்கட்கெல்லாம் உரிய காதல் நெறியாகும். ஆதலின்
அகத்திணைக்கல்வி பெண்ணுக்கும் ஆணுக்கும் கொடுக்கப்பட
வேண்டிய இன்றிமையாக் கல்வியாகும். நம் தமிழ் முன்னோர்
அகக் கல்வியைச் செம்மையாகப் பெற்றிருந்தனர். அதனால்
அன்னோர் இல்லற
வாழ்வு பூசலின்றி இயங்கியது. "பேரமர்
உண்கண் இவளினும் பிரிக" என்று (புறம்.71) பூதப்பாண்டியனும்,
“வரைவின் மகளிர்
மார்பிடை
என் மாலை படுக” என்று (புறம்.
73) சோழன் நலங்கிள்ளியும்
கூறும் வஞ்சினங்களில்
அவர்களின்
மனையன்பைக் காண்கிறோம்.
அகமும் புறமும்
தமிழர்கள் அகத்தையும் புறத்தையும் இரு கண்களாகக் கண்டனர். தொல்காப்பியர் இரண்டையும் ஒப்புமைப்படுத்திக் காண்கிறார் (தொல். புறத். 1, 6,8, 12, 15 நூற்பாக்களும் உரையும்). இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் மிகச் சிறப்பான விளக்கவுரைகளைக் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, முல்லைத்திணைக்கு
நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அமைகிறது. போர்
மேல் பிரிந்த வஞ்சித்தலைவன் திரும்பும் வரை ஆற்றியிருப்பது முல்லையாதலின் இவற்றின்
உரிப்பொருள் இயைபு, அகத்திற்கு ஏற்ற புறம் என்பதை உறுதிப்படுத்துகின்றது. முல்லை என்பது முல்லைத்திணையைக் குறிக்கும். இந்தத் திணைக்குரிய உரிப்பொருள் இருத்தல்
(பொறுமையாகக் காத்திருத்தல்) ஆகும்.
3.3.1
அகத்தின் சிறப்பு
அகம், புறம்
என்னும் இரண்டும்
ஒற்றுமை வேற்றுமைகளைப்
பெற்றிருப்பினும் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணையே
சிறப்புடையதாகக் கருதப்பட்டமை புலனாகின்றது. புறத்திணைப்
பொருளான வீரம் மக்களுள் சிலர்க்கே உரியது;
"நன்னடை நல்கல்
வேந்தர்க்குக் கடனே" என்று புறம் கூறுவதால் (புறம். 312)
அது
படைப்பயிற்சியால் வருவது. அகத்திணைக்குப் பொருளான
காமமோ, ஆண், பெண் என்னும் பிரிவமைந்த உயர்திணை,
அஃறிணை உயிர்க்கெல்லாம் பொதுவானது.
எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொல். 1168)
என்று தொல்காப்பியரே கூறுவது போன்று
உடம்பொடு ஒட்டிய
இயற்கையது.
சங்கத் தனிப்பாடல்களின் தொகை 2381. அவற்றுள்
அகத்திணைப் பாடல்கள் 1862. சங்கப் பாடல்களைப் பாடிய 472
சான்றோர்களுள் அகம் பாடியவர்கள் மட்டும் 378 பேர்கள்.
இவர்களில் பெண்பாற் புலவர்கள் 23 பேர். இவர் பாடிய
பாடல்களின் தொகை 97 ஆகும்.
மேற்கூறிய சங்கச் சான்றோர்களுள் அகத்திணை
பாடாது
புறத்திணை மட்டும் பாடியோர் எண்ணிக்கை 301. அகமும் புறமும்
ஆகிய இரு திணைகளையும்
பாடியோரின் தொகை 71.
தொல்காப்பியர் ஒன்பது இயல்களில் புறத்திணைக்கு ஓர்
இயலை மட்டும் ஒதுக்கி, அகப்பொருளுக்கு அகத்திணையியல்,
களவியல், கற்பியல்,
பொருளியல், மெய்ப்பாட்டியல் எனப் பல
இயல்களை ஒதுக்கியுள்ளார். இதுவும் அகத்திணையின்
சிறப்பையுணர்த்தும்.
3.3.2
அகமும் நாடகப் போக்கும்
அகஇலக்கியம்
நாடகப் போக்கினைக் கொண்டது.
புறப்பொருள் பாடல்கள், நடந்ததை நடந்தவாறே கூறுவன. அறமும்
பொருளும் பற்றிய
உலகியல் நிகழ்ச்சிகளை வரலாற்றுப்போக்கில்
தொடர்பாகக் கூறமுடியும். ஆனால் நெஞ்சம் கலந்து இன்புறும்
அகவொழுக்கத்தை அவ்வாறு கூறல் இயலாது. சங்க அகப்பாடல்கள்
சுவைபட
வருவனவற்றை யெல்லாம் கூறுகின்றன. அதனால் அவை
உலகியல் வாழ்க்கையைத் தழுவியும் குறிக்கோள் தன்மை
இணைந்தும் காணப்படுகின்றன.
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொல். அகத். 56)
என்பது தொல்காப்பியம்.
'அகப்பாடல்களில் முதல், கரு, உரிப்பொருள்கள்
கூறப்படுதலின், அவை நாடக வழக்கைக் காட்டிப் பாட்டின்
கருத்தும் பொருளும் வாழ்க்கையினின்றும் கொள்ளப்படுதலின்
உலக வழக்கையும் சேர்த்து வழங்குகிறது' என்று ஆய்வாளர்
கூறுவர்.
அகத்துறை சங்கப் பாடல்கள் ஒற்றைக்காட்சி
நாடகமாக (One
Act play) அல்லது ஒரு கூற்று நாடகமாக (Dramatic monologue)
அமைந்திருக்கின்றன.
பெயர் சுட்டாமை
அகத்துறையில் வருபவர்கள் கற்பனை மாந்தர்களே.
அவர்களின் பெயர்கள் குறிக்கப்படுவதில்லை. பெயர் சுட்டப்பட்டால்
அது அகஇலக்கியம் ஆகாமல் வாழ்க்கை வரலாறாக ஆகிவிடும்.
மேலும் அந்நிகழ்ச்சியின் அடிப்படையில் பெயர் குறிப்பிடப்
பெற்றவருக்கும் சமுதாயத்தில் சிக்கல்கள் தோன்றக்கூடும். மேலும்
அகப்பொருள்
இலக்கியம் குடும்ப இலக்கியமாகும்.
ஐந்திணை, காதல் ஒழுக்கங்கள் எல்லா
மக்களுக்கும் பொது
ஆகலின் அவற்றைத் தழுவி ஒருவர்ப் பெயர் சுட்டிப் புலவர்கள்
பாடார்
என்று தொல்காப்பியர் கூறுவதும் இங்குச் சிந்திக்கத் தக்கது.
நாடகப் போக்கு
நாடகத்தில் ஐந்து அங்கங்கள் உள்ளன. அகத்துறை இலக்கியத்தில் இயற்கைப் புணர்ச்சியே தோற்றம்; பாங்கிமதி உடன்பாடு, வளர்ச்சி ; பகற்குறியும் இரவுக்குறியும் முதிர்வு;
அவற்றின் இடையீடு, அறத்தொடு நிற்றல்,
உடன்போக்கு முதலியன
திருப்பம்; வரைதல் முடிவு. சங்க இலக்கியம் இவ்வாறு நாடகப்
போக்கில் அமைகிறது.
எனவே, சங்க காலப் புலவர்கள் காதல்
உணர்வென்னும்
அடித்தளத்தில், கற்பனை, மாந்தர்களின் நிகழ்ச்சி ஆகியவற்றை
வைத்து
நாடகப்போக்கில் பாடல்கள் இயற்றினர். இதிலிருந்து சங்க
கால அக இலக்கியங்கள்
நாடகப் பாங்கினை நோக்கமாகக் கொண்டு
இன்பம் பயப்பன என அறியலாம்.
3.3.3
அகமும் உளவியலும்
சங்கப் பாடல்கள் அமைப்பாலும் நடையாலும்
உரையாடல்
தன்மையாலும் கருத்தமைதியாலும் நிகழ்ச்சிப் பின்னலாலும்
உளவியல் அடிப்படையில்
ஒத்து நிற்பவை.
சங்க இலக்கிய
அகத்திணைப் பாடல்கள்
நூற்றுக்கு நூறு
உளவியல் பற்றியனவே. ஏதேனும் ஒரு மனநிலையை மட்டுமோ,
அம்மனநிலை விளைவதற்குரிய சூழலை மட்டுமோ அவை
பாடுபொருளாய்க் கொண்டவை.
சங்க அக இலக்கியங்கள் திணை, துறைகளுக்குத் தரும்
சிறப்பைக் காட்டிலும் அகமாந்தரின் மனவுணர்வுகளுக்குச் சிறப்பிடம்
தருகின்றன. சங்க அக இலக்கியங்கள் அகமாந்தரின் கூற்று
அடிப்படையில் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.
சங்க அக இலக்கியங்களில் இடம்பெறும் அகமாந்தர்கள்
தோழி, தலைவி, தலைவன், தாய், செவிலி, பரத்தை, வாயில்கள்
என்போராவர். அகமாந்தரின் மனவுணர்வுகள் கூறுவோரின் இன்ப
துன்ப நிலைக்கு ஏற்பவும், கேட்போரின்
மனநிலைக்கு ஏற்பவும்
மாறுபட்டு ஒலிக்கின்றன. கேட்போருக்கமைந்த பின்புலங்களின்
தன்மைக்கேற்ப, கூறுவோர் உள்ளுறை, இறைச்சிகளைப்
பயன்படுத்திக் குறிப்பாகவோ, உவமைகளைப் பயன்படுத்தி
விளக்கமாகவோ, நேர்முகச் சொற்களைப் பயன்படுத்தி
வெளிப்படையாகவோ தம் மனவுணர்வுகளை வெளியிடுகின்றனர்.
இம் மனவுணர்வுகள் உளவியல் அணுகுமுறை கொண்டும்
புலவர்கள்தம் வரன்முறைக்குட்படத்தப்பட்ட புலனெறி மரபு
சார்ந்தும் விளங்குகின்றன என்று டாக்டர்
ஆ.இராமகிருஷ்ணன்
குறிப்பிடுகிறார்.
3.3.4
அகமும் கற்பும்
சங்க அக இலக்கியம் பெண்ணின் கற்பை வற்புறுத்தும்
கற்பிலக்கியமாகத் திகழ்கிறது.
உயிரினும் சிறந்தன்று நாணே ;
நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று
(தொல்.பொருள்.கள. 23)
எனத் தொல்காப்பியம்
கற்பிற்கு
இலக்கணம் வகுத்துள்ளது.
அகத் தலைமையை ஏற்கும் தலைவியின் பல்வேறு
பண்புகளைக் கூறும் தொல்காப்பியம்
தலைவியின் பண்புகளில்
கற்புடைமையையே
முதலில் வலியுறுத்துகிறது.
தலைவியின் திண்ணிய கற்புக்காதலே முடிவில் வெற்றி
பெறுகிறது. தலைவியின் காதல், கற்பாகாமல் (திருமணத்தில்
முடியாமல்) தோல்வியுற்றதாகவோ, உயிர் துறந்ததாகவோ சங்க
இலக்கியம் கூறுவதில்லை. தலைவியின் காதல் நெஞ்சத்திற்கு
முன்
குடும்பமும், உலகமும் அடங்கி ஒழுகுவதுதான் சங்க இலக்கியத்தின்
சிறப்பாக அமைகிறது. அறியாமையால் மேற்கூறியவை அடங்கி
ஒழுகாதபோது கற்பின் திண்மை மற்றவற்றைத் துச்சமாக
நினைத்து
நீங்குகிறது.
நின்னணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவு ளாயினும் ஆகுக
மடவை மன்ற வாழிய முருகே ! (நற். 34)
“தலைவன் மார்பு தர (காரணமாக) வந்த
இந்நோய் உன்னால்
ஏற்பட்டதல்ல என்று அறிந்தும், வேலன் வேண்டிக் கொண்டதனால்
இங்கு வந்துள்ள முருகவேளே! நீ கடவுள் ஆனாலும் அறியாமை
உடையவனே, நீ வாழ்க!” - என்று
கூறித் தோழி அறத்தொடு
நிற்கிறாள் என்ற கற்புள்ளம் கடவுளையே எள்ளும் நிலைக்குச்
செல்கிறது. பெண் கற்பு, கடவுட் கற்பாம் என்பது அக இலக்கியம்
துணிந்த துணிபு.
அக இலக்கியம் கற்புடைய பெண்ணின் கற்பைச்
சோதிப்பதாகவோ, ஐயுறுவதாகவோ காட்டுவதில்லை.
இற்பரத்தைக்கும் கற்பு இருப்பதாகக்
காட்டுவதே அக இலக்கியம்;
கற்பில்லாது பரத்தமை பூணும் தலைவனையும் தன் அருளால்
வரவேற்று
அவனுடன் வாழ்வதைக் காட்டுவது. கற்புக்கு முதன்மை
கொடுக்கும் நோக்கத்தையும் நிறைவாழ்வுப் பயனையும் அக
இலக்கியங்கள் அறிவிக்கின்றன.
| தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
| 1. |
உலக இலக்கியங்களில் காதலுக்கு இலக்கணம் வகுத்த
நூல் எது? |
|
| 2. |
எட்டுத்தொகையில் அகத்திணை நூல்கள் மூன்றினைக்
குறிப்பிடுக. |
|
|
3. |
பத்துப்பாட்டில் அமைந்த அகத்துறை
நெடும்பாடல்களில் ஏதேனும் இரண்டின் பெயர்களைக்
குறிப்பிடுக. |
|
| 4. |
அகம் என்றால் என்ன? |
|
| 5. |
பழந்தமிழர் எவற்றைத் தம் இருகண்களாகக் கண்டனர்? |
|
|
6. |
'நன்னடை
நல்கல் வேந்தர்க்குக் கடனே' என்று கூறும்
இலக்கியம் எது? |
|
|
7. |
தொல்காப்பியத்தில் அகத்திணை குறித்த இயல்கள்
எத்தனை? அவையெவை? |
|
|
8. |
சங்க அக இலக்கியங்களில் இடம்பெறும் அகமாந்தர்கள்
யாவர்? |
|
|
9. |
கற்பிற்கு இலக்கணம் வகுக்கும் தொல்காப்பிய நூற்பா
எது? |
|
|