1.2 தமிழ் இலக்கிய வகைகள்

     உலக இலக்கியங்கள் அனைத்திலும் வகைப்பாடுகள் அமைவதுண்டு. தமிழில் உள்ள அளவு ஆங்கிலம் போன்ற மொழிகளில் வகைப்பாடுகள் இல்லை எனக் கூறலாம். தமிழ் இலக்கிய வகைகளைச்     செய்யுள் இலக்கிய வகைகள், உரைநடை இலக்கிய வகைகள் என இருபெரும் பிரிவுகளில் வகைப்படுத்தலாம். செய்யுள் இலக்கிய வகைகள் இரண்டாயிரம் ஆண்டுக்கால வரலாறு உடையவை. உரைநடை இலக்கிய வகைகள் இருநூறு ஆண்டுகளுக்குள் தோற்றம் பெற்றனவாகும்.

1.2.1 செய்யுள் இலக்கிய வகைகள்

ஆங்கிலச் செய்யுள் இலக்கியங்களை பாலட், லிரிக், ஓட், சானட், எலிஜி, இடில் என வகைப்படுத்துவர். தமிழைப் பொறுத்த வரை செய்யுள் இலக்கிய வகைகள் நீண்ட காலப் பாரம்பரியம் மிக்கன. அவற்றைப் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தலாம்.

பொருளடிப்படையில் அக இலக்கியம், புற இலக்கியம் என வகைப்படுத்தலாம்.

பாவடிவ வகையால் அகவல், இன்னிசைப்பா, குறள், சிந்து, விருத்தம், வண்ணம், வெண்பா என வகைப்படுத்தலாம்.

இசை அடிப்படையில் கீர்த்தனை, சந்தம், பதம், பாசுரம் எனக் கூறலாம்.

இலக்கணம் மீறிய புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை எனவும் வகைப்படுத்தலாம்.

எளிய மக்களின் கவிதைகளான கும்மி, ஊஞ்சல், பந்தடி, ஓடப்பாட்டு, ஏலப்பாட்டு என நாட்டுப்புறப்பாடல் வகைகளாகவும் வகை கொள்ளலாம்.

1.2.2 உரைநடை இலக்கிய வகைகள்

     உரைநடை வடிவில் எழுந்த இலக்கிய வகைகள் இன்று ஏராளமாய் பெருகியுள்ளன. அவைகளில்,

(1) சிறுகதை
(2) புதினம்
(3) நாடகம்
(4) கட்டுரை
(5) வாழ்க்கை வரலாறு
(6) நாட்குறிப்பு
(7) கடிதம்

என்பன சிலவாகும்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
இலக்கியத்தின் சிறப்பு யாது?
2.
மு.வ.வின் இலக்கியப் பகுப்பினைக் கூறுக.
3.
ஆங்கிலத்தில் செய்யுள் இலக்கியப் பிரிவுகள் யாவை?
4.
தமிழ்ச் செய்யுள் இலக்கிய வகைகளை எவ்வாறு வகைப்படுத்துகின்றனர்?