2.2
நாகசுரம்
மேளக் குழுவின் முதன்மைக்
கருவியாக நாகசுரம் விளங்குகிறது. இது ஒரு குழல் கருவியாகும்.
இதனைப் பெரு
வங்கியம் என்றும், நாகசுரம் என்றும், நாயனம்
என்றும்
அழைப்பர். வங்கியம் என்பதனை இசைக்குழல் என்று நிகண்டு
குறிப்பிடுகிறது. ‘வங்கியம் பலதேன் விளம்பின’
என்று
கம்பராமாயணமும் குறிப்பிடுகின்றது. புல்லாங்குழலைச்
சிறுவங்கியம் என்றும், நாகசுரத்தைப் பெருவங்கியம் என்றும்
அழைப்பர். இக்கருவியின் மூலம் ‘மல்லாரி’ என்ற
இசை
இசைக்கப்படுமானால் இறைவன் வீதி உலா எழுந்தருளும்
நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என்பதனை அறிய முடியும்
.
தொடக்கத்தில்
நாகசுரம் என்று வழக்கிலிருந்த இந்த
இசைக் கருவி, பின்னர் நாதசுவரம்
என வழங்கப்பட்டது.
இதுவே சரியான வடிவம் என்னும் எண்ணத்தில் எல்லோரும்
சொல்ல ஆரம்பித்து, இப்போது நாதசுவரமாகவே
நிலைத்து
விட்டது. இதன் மூல வடிவம் நாகசுரம் என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்.
நாகசுர கருவி எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது
அதன்
வகைகள் எவை என்பதைப் பார்ப்போம்.
நாகசுரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படும்.இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும். இதனால் பழமையான வீடுகளில் கட்டடமாக இருந்து, பிரிக்கப்பட்ட பொழுது இம்மரத்தை வாங்கி வந்து, இக்கருவியைச் செய்வர். இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர். உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும். இக்கருவியின் அளவிற்கேற்ப, முகவீணை, திமிரி நாயனம், பாரி நாயனம், இடைப்பாரி நாயனம், மத்திம சுருதி நாயனம் என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர். நாகசுரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும். இது ஒரு வகை நாணல் என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த நாணலைக் ‘கொறுக்கைத் தட்டை’ என்பர். இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து பக்குவப்படுத்துவர். இச்சீவாளியையும் நாகசுரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப்பட்டிருக்கும்.
நாகசுரத்தில்
பாரி, திமிரி, இடைப்பாரி, மத்திம சுருதி
என்ற வகைகள் உள்ளன. நாகசுரத்தின் அளவிற்கு ஏற்பவும்
துளை அமைக்கும் முறையாலும் இவ்வாறு பெயரிடப்படுகின்றன.
பாரி நாயனம் திருவாரூர்க்குரிய சிறப்பான கருவியாகும். இது
முகவீணை என்ற கருவிக்கும், இன்று நிலவும் நாகசுரத்திற்கும் இடைப்பட்ட
நீளமுடையதாகும். இது சோழர் காலத்துக்
கருவியாகத் திகழ்கிறது. சிற்பங்களில் காணப்படும்
கருவி இதுவேயாகும். திருவாரூரில் குடமுழா என்ற பஞ்ச
முக வாத்தியமும், பாரி நாயனமும்
இன்றும் சிறப்புடன்
போற்றப்பட்டு வருகின்றன.
2.2.2 இரட்டை நாயன முறை
நாகசுரப்
பயிற்சி குருகுல முறையில் அமைந்த ஒன்றாகும்.
குறைந்தது பத்து வருட காலப் பயிற்சி வேண்டும். குருவின்
வீட்டில் தங்கி, பல்வேறு பணி விடைகள் செய்து கொண்டு
கற்பர். விடியற்காலையில் தொடக்கப் பயிற்சியாகிய
சரளி
வரிசைப் பயிற்சிகள் அளிக்கப்படும். ஆசிரியரோடு சேர்ந்து
இசைக் கச்சேரிகளில் தாளம் போடுபவராகப் பயிற்சி பெற்று நாகசுரக்
கருவியை இசைக்கும் திறம் பெற்றதும் குருவோடு
சேர்ந்து இசைக்கத்
தொடங்குவர். இக்குருகுலப் பயிற்சி
முறையின் மூலம் ஆலய வழிபாட்டு இசையும், சமுதாய
விழாக்களில் இசைக்க வேண்டிய மரபுகள் போன்றவற்றில்
பயிற்சியும் பெறுவர்.
|