vi
களில் இவருடைய பெயர் சுட்டப்பெறுகிறது. ‘அளப்பெருங்கடற் பெயர் அருந்தவத்தோனே’ என்று யாப்பருங்கலப்பாயிரம் அந்நூலைச் செய்த ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுகிறது. அளப்பரும் என்பதை ‘அமித’ என்றும், கடல் என்பதை ‘சாகரம்’ என்றும் பொருள் கொண்டு, அமிதசாகரன் என்பது இந்நூலாசிரியர் பெயர் என்பர். இவர் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு என்பர்.
யாப்பருங்கலம் விரிவாக அமைந்திருந்ததனால் அமிர்தசாகரர் அதனைச் சுருக்கக் கருதி யாப்பருங்கலக்காரிகை இயற்றினார். முன்னது அகவல் பாவாலும், பின்னது கட்டளைக் கலித்துறையாலும் எழுதப்பட்டன. யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரு நூல்களுக்கும் குணசாகரர் உரை எழுதியுள்ளார். குணசாகரர் நூலாசிரியர் அமுதசாகரரின் ஆசிரியர் என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆசிரியர் மாணவர் நூலுக்கு உரை எழுத மாட்டார் என்ற கருத்தை அறிஞர் கூறுகின்றனர். ஆயின் குணசாகரர் அமுதசாகரரின் ஆசிரியர் அல்லர்; அவர் பெயரைக் கொண்ட பிறிதொருவர் என்றும் அறிஞர் கருதுவர். இவரும் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
‘யாப்பருங்கலம் விருத்தியுரை’ மிகவும் சிறப்பு வாய்ந்த உரையாகும். உரை ஆசிரியர் குணசாகரரின் நுண்மாண் நுழைபுலத்தையும் பரந்துபட்ட கல்வி அறிவையும் அவர் எடுத்துக் காட்டும் நூற்கள் மற்றும் பாடல்களின் வழி அறியலாம். சுருங்கக் கூறின் யாப்பருங்கலம் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த கலைக் களஞ்சியம். பல்லவர் காலத்தில் தோன்றிய இலக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கு இவ்வுரை துணைசெய்கிறது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியில் தோன்றிய இலக்கிய இலக்கணங்களை அறிந்து கொள்ளும் வகையில்     இலக்கிய     வரலாற்றுப்     பெட்டகமாகத்      திகழ்கிறது.
தொல்காப்பியத்திற்குப் பின்னர் தமிழில் தோன்றிய பாக்கள் பாவினங்களின் வளர்ச்சியை உணர்த்துகிறது.