viii
இலக்கணம் எண்ணிக் கற்றவன்; அன்பில் விளைவதே அறமெனக் கொண்டவன்; தென்பில் செந்தமிழ்க் குழைப்பதில் தேர்ந்தவன்’ என்று பவானந்தம்பிள்ளை அவர்களின் பதிப்புப்பணியைப் பாரதிதாசன் போற்றிப் பாடியுள்ளார்.
பவானந்தம் பிள்ளை அவர்கள் பிழைகள் மலிந்த சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு பதிப்பித்ததால் அவர்கள் பதிப்பித்த நூலிலும் பிழைகள் பல காணப்பட்டன.
மகாவித்துவான் வேணுகோபாலப்பிள்ளை அவர்கள் தமக்குக் கிடைத்த செம்மையான சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த யாப்பருங்கலத்தைச் செப்பம் செய்து, விளக்கக் குறிப்புச் சேர்த்துப் பவானந்தர் கழகத்தின் வழி, தமிழக அரசுக்கு வெளியிடத்தந்தார்.
குறிப்பிட்ட காலச்சூழலில் இந்நூல் வெளிவர வேண்டும் என்ற நிலையில் தமிழ்ப்புலவர் சிலரின் துணை கொண்டு 1960-இல் இப்பதிப்பு வெளிவந்தது. மகாவித்துவான் வேணுகோபாலப் பிள்ளை அவர்களின் பார்வைக்குப்படாமல் இந்நூல் வெளிவந்ததால் இதிலும் பிழைகள் முற்றும் களையப்படவில்லை.
மகாவித்துவான் வேணுகோபாலப்பிள்ளை அவர்களின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு 19.7.97 அன்று கொண்டாடிற்று. நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க் குடிமகன் அவர்கள் ‘1960-இல் வேணுகோபாலப்பிள்ளை பதிப்பித்த ‘யாப்பருங்கலம்’ இன்று கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு விரைவில் அந்நூலை மீண்டும் வெளியிடும்’ என்று அறிவித்தார். 1960 க்குப் பிறகு அந்நூல் மறுபதிப்புச் செய்யப்படவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.