494

இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


74.  பெருங்காப்பியம் :

தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் இவற்றிற்கு இயைய வாழ்த்து
முன்னுளதாய், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும்
பயக்கும்நெறியுடைத்தாய், நிகரிலாத் தலைவனை உடைத்தாய், மலையும்
கடலும் நாடும் நகரும் பருவமும் இருசுடர்த் தோற்றமும் என்று இவற்றின்
வளம்கூறுதலும், மணமும் முடி கவித்தலும் பொழில் விளையாட்டும்
நீர்விளையாட்டும் உண்டாட்டும் மகப்பேறும் புலவியும் கலவியும் என்று
இவற்றைப் புகழ்தலும், மந்திரமும் தூதும் செலவும் போரும் வெற்றியும்
என்று இவற்றைத் தொடர்ந்து கூறலும் ஆகிய இவை முறையேதொடர்புறச்
சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பகுதியை உடைத்தாய்வீரம் முதலிய
சுவையும் அவற்றை விளக்கும் கருத்தும்  விளங்கக்கற்றோரால்
இயற்றப்படுவதாம். நாற்பயன் ஒழிந்து ஏனையஉறுப்புக்களுள் சில
குறைந்துஇயலினும் குற்றமின்று. 

75.  பெருமகிழ்ச்சிமாலை :

தலைவியின் அழகு குணம் ஆக்கம் சிறப்பு இவற்றைக் கூறுவது.

76.  பெருமங்கலம் :

நாடோறும் தான் மேற்கொள்ளுகின்ற சிறை செய்தல் முதலிய
செற்றங்களைக் கைவிட்டுச் சிறைவிடுதல் முதலிய சிறந்த
தொழில்கள்பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும்
வெள்ளணியைக்கூறுவது. 

77.  போர்க்கெழுவஞ்சி :

மாற்றார்மேல் போர்குறித்துப் போகின்ற வயவேந்தர் வஞ்சிப்பூமாலை
சூடிப்புறப்படும் படைஎழுச்சிச் சிறப்பை ஆசிரியப்பாவால் கூறுவது.