v

சூத்திரங்களைச் சேர்ப்பதும் தமிழில் ஒரு வழக்கம். கட்டளைக் கலித்துறையால் இயன்றமை பற்றி நவநீதப் பாட்டியலாகிய இந்நூலுக்குக் கலித்துறைப் பாட்டியல் என்ற ஒரு பெயரும் வழங்கி வரலாயிற்று.

இந்நூலிற் காணப்படும் கலித்துறைகளின் தொகை 108. சில
செய்யுட்களின் அமைப்பை நோக்கும்போது இடைச் செருகல்கள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கலாமென் பது தெரியும்.

நவநீதப் பாட்டியலுக்கு முதனூல் அகத்தியனார் அருளிச் செய்த ஒரு பாட்டியலாகு மென்பது இந்நூலின் சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். பன்னிரு பாட்டியலில் அகத்தியர் பாட்டியல்* (55) என்ற பெயர் வந்துள்ளமையால் அகத்தியரால் இயற்றப் பெற்ற பாட்டியல் ஒன்று உண்டென்று ஊகிக்கலாம். அகத்தியனார் இயற்றியது பருணர் பாட்டியல் என்று நவநீதப்பாட்டியலின் சிறப்புப் பாயிரச் செய்யுளின் உரை கூறுகிறது (பக்.3.) மேலும் இந்நூலின் உரை பலவிடங்களில் அகத்தியரைப் பாராட்டியுள்ளது. ஆதி அகத்தியர் வேறு இவ்வகத்தியர் வேறு என்பது சிலர் கருத்து. இது வழிநூலென்பது, ‘முதனூன் மொழிந்த நெறி, கேட்டுத் தெரிந்து கொள்’ (66) என்பதனாலும் தெரியவரும்.

டாக்டர் ஐயரவர்கள் தொகுத்து வைத்துள்ள நூல்களுள் நவநீதப் பாட்டியல் சம்பந்தமான கடிதப் பிரதியொன்றும், மூலமும் உரையும் உள்ள ஏட்டுச் சுவடிகள் மூன்றும், மூலமட்டும் உள்ள ஏட்டுப்பிரதி யொன்றும் இருந்தன. கடிதப்பிரதி மூலமும் உரையும் அடங்கிய சுவடியைப் பார்த்து எழுதியது. அதில் அவர்கள் முக்கியமான சில திருத்தங்களைச் செய்திருக்கிறார்கள். அதன் தொடக்கத்தில் அவர்கள், ‘சொந்தம். இந்நூலுக்கு உரைகள் இரண்டு உண்டு’ என்று குறி்த்துள்ளார்கள். இதனால் இதற்கு இருவர் தனித்தனியே உரைகள் இயற்றி யிருக்கிறார்கள் என்பது தெளிவாயிற்று. ஓர் உரை மிகவும் பழமையானது என்பது அதில் எடுத்தாளப்படும் நூல்களால் விளங்கும். அவற்றிற் பெரும்பாலனவற்றைக் காலத்தால் முற்பட்ட வெண்பாப் பாட்டியலின் உரைகாரர் கூட எடுத்தாளவில்லை. வெண்பாப்பாட்டியலைப் பற்றி இந் நூலுரையால் ஒன்றும் அறிவதற்கில்லை. மேலும் இந்நூலின் போக்கு வெண்பாப் பாட்டியலை ஒட்டியிராமல் பல விடங்களில் மாறுபட்டுள்ளது


*இங்கே குறிக்கப்படும் எண்கள் கலித்துறை எண்களைக் காட்டும்.