பொருந்துவதன்று. ஆதலால், ஆதியிற் செய்யுளிலக்கணமாக அகத்தியராற் செய்யப்பட்டதொரு செய்யுளியல் தனியாயிருந்ததுபோல அலங்கார லக்ஷணமான அணியியல் என்னும் நூலொன்று தனியாயிருந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. காலக்கிரமத்திற்றோன்றும் ஒவ்வொரு வழிநூலும் முதனூலிலிருந்த முறையே கூறாது சிலபகுதியைத் தொகுத்தும், சிலபகுதியை விரித்தும், சிலபகுதியை வேறுபடுத்தியும், சிலபகுதியை யொழித்தும், வேறுசில பகுதியைப் புதிதாகச் சேர்த்தும் செய்யப்படுவ தியல்பாதலால், தொல்காப்பியத்தைக் கொண்டு அகத்தியமுதலிய முதனூல்களில் அணியிலக்கணமுறை இவ்வாறிருந்ததென் றறிய முடியாதிருக்கிறது. நன்னூலில் ஓரதிகாரம் அணியிலக்கணஞ் சொல்லப்பட்டிருந்ததாகப் பழையவுரை யொன்றால் ஊகிக்கப்படுகிறது. அதுவும் இதுகாறு மகப்படாமையா லதன்முறையும் விளங்கவில்லை. ஆயினும் பல்காப்பியத்தும் புலப்படும் அணிவகை பலவுந் தொல்காப்பியத்தும் பலபடியாகச் சொல்லப்பட்டுள்ளன. அவை, உவமவியலால் உவமவகையும், மெய்ப்பாட்டியலாற் சுவையணிவகையும் வெளிப்படையாக விரித்துரைக்கப்பட்டன. ஒழிந்தன ஒருசில உத்திவகையிலும், ஒருசில பொருள்கோள் வகையிலும், வேறுசில வனப்புவகையிலும், மற்றுஞ்சில வண்ணவகையிலும், பின்னுஞ்சில குறிப்புவகையிலும், பிறவும்பல சொன்முடிபிலக்கணங்களிலும் அமைந்து கிடக்கின்றன. ஆயினு மிவற்றைப் பிற நூன் முடிந்தது தானுடம்படுதலென்னு முத்திபற்றித் தனியே விதந்தோதாது உவமையொன்றே கூறி யொழித்தனர்போலும். மத்தியகாலத் தமிழ்ப்பயிற்சி வடமொழிப் பயிற்சியுடன் கூடியிருந்தமையால், பொருள்பற்றியுணரத்தகும் அணியிலக்கணங்களை எளிதின் வடமொழியிற் பயிலத் தமிழணியிய லருகியதுபோலும். இதற்கு இக்காலத்து ஆங்கிலக்கணிதமுறைப் பயிற்சியாற் றமிழ்க்கணிதமுறைப் பயிற்சி யருகியிருப்பது திருட்டாந்தமாகும். வடமொழிப்பயிற்சி குன்றிய பிற்காலத்து, தொல்காப்பியத்துட் சொல்லப்பட்ட சில பழைய தமிழிலக்கணங்களையே சந்தி, காரகம், தத்திதம், தாது, கிரியாபதம் என வடமொழிமுறை தழுவிவரைந்தது போல, அணியிலக்கணமும், வீரசோழியமுடையாரால் ஓரதிகாரமாகத்
|