தொகுத்தும், தமிழ்த் தண்டியலங்காரமுடையாரால் ஒருதனிநூலாகச் சிறிது விரித்தும் வடமொழிமுறை தழுவி வரையப்பட்டிருக்கிறது. அதுவும் நிரம்புதலின்மையால் அதனை நிரப்பவேண்டித் திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்னும் புலவர்பெருமானால், அந்நூலைப் பின்பற்றி அதன்கணில்லாதனவாய்ப் பழையவும் புதியவுமாகிய இலக்கியங்களிற்காணும் வேறுசில அணிகளையும், பிறிதொடுபடான்றன்மதங் கொளலாகச் சில அணிகளையுங் கூட்டித் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் இலக்கணங்கூறிச் சூத்திரங்களைப் பெருக்கி, தம்மாலும் பிறராலும் பாடப்பட்ட பிறகாவியச்செய்யுள்களுடன், கற்பவர்க்குப் பழந்தமிழிலக்கியப் பயிற்சியை எளிதிலுண்டாக்குவனவாய்ப் படிப்பவர்க்குத் தெவிட்டாதிருக்கும்படி வெவ்வேறு சுவையுடையவா யகப்பொருள் புறப்பொருட்டுறைகளையமைத்து மானிடப்பாடலை மறக்கும்படி இட்டதெய்வத்தினேத்துதலாய்ச் செங்கண்மால் கோயில்கொண்டெழுந்தருளிய திருப்பதிகளின் விஷயமாகவும், வேதந்தமிழ் செய்தமாற னென்னுந் திருநாமத்தையுடைய நம்மாழ்வார் விஷயமாகவும் தாமேசெய்த வேறுபலபாடல்களையு முதாரணமாகச்சேர்த்து மாறனலங்காரமெனப் பெயரிடப்பட்டுத் தமிழ் வல்லார்க் கிந்நூல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நூலின்வரலாறு, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு முதலியன விரிவுடைமையா லவற்றைத் தனியேயுணருமாறு மாறனலங்காரவரலா *றென்னும்பகுதி யடுத்துச் சேர்க்கப் பெற்றிருக்கிறது. இந்நூல் தமிழ்ப்புலமையடைவோர்க்குப் பெரிதும் உபகாரமாகத் தக்கதாயிருந்தும் உயர்தரக்கல்விகற்பிக்குங் கலாசாலைகளில்லாமையாற் பயில்வோரும் பயிற்றுவோரு மின்றிப் பரவுதல்குன்றியிருந்தது. மதுரைத் தமிழ்ச்சங்க ஸ்தாபகரான ஸ்ரீமத் பாண்டித்துரைத் தேவரவர்களது நன்முயற்சியாற் சங்கத்துக்குவேண்டும் தமிழேடுகள் தேடும்
* இது இந்நூல் பிறந்த திருக்குருகூரிலே பிறந்துவளர்ந்து இப்பொழுது திருச்சி நாஷனல்ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதராயிருக்கிற ஸ்ரீமத். ஏ.எம்.சடகோபராமாநுஜாசாரியரால் நன்குவிசாரித்து விரிவாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டு முன்னமே மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் பன்னிரண்டாம் வருஷக் கூட்டத்து வித்வத்ஸபையிற் படிக்கப்பட்டுச் செந்தமிழில் வெளியிடப்பட்டது. |