முகப்புதொடக்கம்
முகவுரை7

இச்செய்யுளிற் காட்டிய தொகைகள் பதிகத்திற்கும், சொல்லணி யியலுக்கும் பொருந்தவில்லை. மூலப்பிரதியில், சொல்லணியியலிற் சித்திரகவிகளைத் தொகுத்துக் கூறிய சூத்திரத்தில் “இருபானாறும்” என்ற உம்மையாற்றழுவிய மாத்திரைச்சுருக்க முதலிய ஆறினுக்கும் மூலசூத்திரங்கள் ஆறு காட்டப்பட்டிருக்கின்றன. அவை உரைப்பிரதிகளிற் காணப்படாமையாலும், உம்மையாற்றழுவியதா யுரையிற் காணப்படுதலாலும் உரையெழுதியபின்பு செய்து சேர்த்திருக்கவேண்டுமென்றும், இச்சூத்திரங்களையும் மூலத்துடன் கூட்டிப் “பதிகம்பொது” வென்னும் வெண்பா, பின்பு பாடப்பட்டிருக்கவேண்டுமென்றுந் தோன்றுகின்றது. ஆதலால் அவை அவ்வவ்விடங்களிற் சேர்க்கப்பெறாது கீழ்க்குறிப்பிற் காட்டப்பட்டுள்ளன. அவ்வாறையுஞ்சேர்த்து “முதுசொல்லணியிய லைம்பத்துநா” லென்றும், பாயிரச்சூத்திரம் அறுபத்துநாலொடு, பாயிரவுரையிலும், பொதுவியலின் முதற்சூத்திரவுரையிலும் இந்நூலாசிரியர் கூறியதாக மேற்கோள்காட்டிய “பொற்புறவிழுமிய,” “கடவுள்வணக்கமும்,” “உட்கோள்கண்ணழிப்பு,” “கருத்துரைசூத்திரம்,” “தொகுத்த சொற்றொறும்,” “ஒலிகெழுசொற்பொருள்,” “மனாதுறும்யாப்பின்” என்னும் முதற்குறிப்புடைய சூத்திரங்களேழையுங் கூட்டிப் பதிகமெழுபத்தொன்றென்றும் எண்ணினர்போலும்.

சக்கரபெந்த முதலிய சித்திராலங்காரங்களுக்கு மூலத்தாலும் உரையாலும் நன்குவிளங்காத சித்திரபத்திரங்கள் ஒருவாறு புதிதாகச்செய்து இறுதியிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சதுரங்கபெந்தத்தின்கதிவிவர மொன்றும் உரையிற்சொல்லப்படாமையாலும் விளங்காமையாலும், அதற்குச் சித்திரபத்திர மமைக்கப்படவில்லை. சூத்திரம், உதாரணம் முதலியவற்றி னிருப்பிடங்காணுமாறு முதற்குறிப்பகராதிகளும், விஷய சூசிகைமுதலியவு மெழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இது முதற்பதிப்பாதலால் எனக்குத் தெரியாதுதவறியிருக்கும் பிழைகளைச் சுத்தப்பிரதிவைத்திருக்கும் பண்டிதசிரோமணிகள் கண்டு எனக்குத் தெரிவிப்பார்களாயின், அவைகளை மறுபதிப்பிற் றிருத்திக் கொள்ளவும், அவர்களுக்கு நன்றிபாராட்டவும் உபகாரமாயிருக்குமென்பது யாரும் அறியத்தக்கது.

முன் பக்கம்மேல்அடுத்த பக்கம்