புக்குப் பொருத்தமில்லாததால் வேறு அணிநூலைக் குறித்ததாக வேண்டும். நேமிநாதவிருத்தியில், “புனையுறுசெய்யுட்பொருளையொருவழி, வினைநின்று விளக்கினது விளக்கெனப்படுமே” “முதலிடைகடையென மூவகையான” என்பன அணியியல் ஆகலின் என்றுள்ளது. இதில் இரண்டு சூத்திரத்தாற் குறித்த விளக்கணி தமிழ்த் தண்டியலங்காரத்தில், தீபக மென்றபெயரால் ஒரே சூத்திரத்திற் கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் இவ்விருத்திகாரர் குறித்த அணியியல் என்னும் நூல் தண்டியலங்காரத்தினும் வேறாகவேண்டும். நச்சினார்க்கினியர் தொல்காப்பியவுரையில் “இனி இவ்வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும் சொல்லதிகாரத்தினுள்ளும் செய்யுளியலுள்ளுஞ் சொல்லுகின்ற சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு மற்றவை செய்யுட்கண்ணே அணியாமென இக்காலத்தாசிரியர் நூல்செய்தாருமுளர்” எனக்கூறி அவ்வணி நூலுக்குத் தமது சம்மதமின்மையையும் தெரிவிக்கிறார். இவ்வாக்கியத்திலுள்ள விஷயம் வடமொழியிலிருந்து பெயர்த்த தண்டியலங்காரத்தைக் குறிக்காது வேறு அணிநூலையே குறித்ததாக வேண்டும். பரிமேலழகர் பக்ஷாந்தரமாய்க்கூறும் நுவலாநுவற்சி, ஒட்டு என்னும் பரியாயப் பெயர்கள் முறையே வீரசோழியத்திலும் தண்டியலங்காரத்திலும் காணப்பட்டபோதிலும் அவர் தன்மதமாகக்கூறிய பிறிதுமொழிதல் என்பது அணிநூலுட் கண்டதாகவிருந்தாலு மிருக்கலாம். இப்படியே வீரசோழியம், தண்டியலங்காரங்களுட் காணப்படாத சில அணிகளின் பரியாயப் பெயர் இவருரையிற் காணப்படுகின்றன. இன்னோரன்ன காரணங்களால், தண்டியலங்காரத்தினும் வேறாய அணிநூல் அல்லது அணியிய லென்ற நூலொன்று இருந்து விழுந்திருக்க வேண்டுமென் றேற்படுகிறது. ஆனால், தண்டியலங்காரத்திற்கே அணியியலென்னும் பெயர் இருந்திருக்கிறது. அணியியலென்றபெயருடன் அடியார்க்குநல்லாரும், மாறனலங்காரவுரையாசிரியரும் (மா-அ-சூத் 25-ன் கீழ்) எடுத்துக்காட்டி யிருக்கிறமுறையே சூத்திரம் இரண்டு மொன்றும் தண்டியலங்காரத்துட் காணப்படுகின்றன. இத் தண்டியலங்காரச் சூத்திரங்கள் அணியியலென்னும் நூலிலிருந்து முன்னோர் மொழியாக எடுத்துத் தண்டியலங்காரத்துட் சேர்க்கப்பட்டிருக்கலாமென்று கருதுவதற்கு இடங்கொடுக்கின்றன.
|