இனி, ‘மாறனலங்காரம்’ என்பதைப் பற்றி விசாரிப்போம். மாறன் என்பது பாண்டியரைக் குறிக்கிற பழம் பொதுப்பெயர்களுள் ஒன்று ; இங்கு ஆழ்வார்களுட்சிறந்த நம்மாழ்வாரைக் குறிக்கிறது. இவர் பாண்டியரது அரசாட்சிக்குட்பட்ட பொருநையாற்றின் அடைகரையாகிய திருவழுதி வளநாட்டுக்குரிய சிற்றரசர். மாறன், காரிமாறன், சடகோபன், திருவழுதி வளநாடன், பொருநற் (தாம்ரபர்ணி) சேர்ப்பன், பொருநற்சங்கணித்துறைவன், மகிழ்மாலைமார்பினன் முதலான பெயர்கள் இயல்பாயும், காரணம்பற்றியும் இவருக்கு வழங்கி வந்தனவென்று திருவாய்மொழியால் தெரிகிறது. இவர் பிறந்தபொழுதே தொடங்கித் திருமாலினிடத்து விசேஷபக்தியுடையராய் உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் தண்ணனேயென் றத்யவசித்துத் ததேக த்யானபரராயிருந்து நான்கு வேதங்களையும் திருவிருத்தம் திருவாசிரியம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி என்னும் நான்கு தமிழ்ப்பிரபந்தங்களாக லோகோஜ்ஜீவநார்த்தமாக வெளியிட்டருளினர். இவரை அக்காலத்திலிருந்த மதுரகவி முதலான ப்ராஹ்மண சிரேஷ்டர்களும் பிற்காலத்து வந்த நாதமுனி, யாமுநாசார்யர், ராமாநுஜர் முதலான ப்ராஹ்மணசிரேஷ்டர்களும் ஆசார்யராகமதித்து நேரிலும் விக்ரகரூபமா யெழுந்தருளப் பண்ணியும் ஆழ்வார்களுட் டலைமையானவராய்க்கொண்டு ஆராதித்து வந்தனர். வடநாட்டிலும் துளசீதாசர் முதலானோரால், பாராட்டிப் பூசிக்கப்பட்டார் இவ்வாழ்வாரெனின், இவரைப் பற்றி நாம் அதிகமாயெழுத வேண்டியதில்லை. இந்நூலாசிரியர் இவ்வாழ்வாரிடத்து ஏழாட்காலும் பழிப்பிலாத் தொண்டுபூண்டு மறந்தும் புறந்தொழாதவமிசத்துட்பிறந்த வைணவமதாபிமானமுள்ளவரான படியினாலே, தண்டியலங்கார முதலிய நூல்கள் அரசர் முதலியவர்களைப் பற்றிக்கூறி லௌகிக திருஷ்டாந்தங்களுடையனவாயிருப்பது கொண்டு, தா மிந்த அலங்கார நூலையியற்றி இதை ஆழ்வார்க்குச் சமர்ப்பித்து உதாரணங்களை ஆழ்வார் விஷயமாகவும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் விஷயமாகவும் வைஷ்ணவபரமாய்ச் செய்து சேர்த்தருளிக் ‘காரிதந்தருள் கலைக்கடலியற் பெயர்புனைந்து’ (மா-அலங். பா) ‘திருமகிழ்ப்பரமதேசிகன் பெயரால்’ (மா-அகப்) இந்நூலை வெளியிட்டருளினர். ஆகவே மகிழ்மாறன் அல்லது நம்மாழ்வாரை நாயகனாகக் கொண்ட அலங்கார சாஸ்திரமாகுமிது. |