வடமொழியிலும் நம்மாழ்வார் விஷயமான ஒரு அலங்கார சாஸ்திரம் ‘சடவைரிவைபவதிவாகரம்’ என்ற பெயருடன் குவலயாநந்தத்தை யநுசரித்ததாய் விளங்குகிறது. கூடிய சீக்கிரம் அச்சில்வரும் இத் தமிழணி நூல், பாயிர இலக்கணத்தை முதலிற் பெற்று, அது தவிரப் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என நான்கு பகுப்புடையதாயிருக்கிறது. இந்நூற் பொதுப்பாயிரத்துள் “வெள்ளையினகவலின் விளம்பலு மரபே” என்றபடி இந்நூலாசிரியர் பொதுவியலைமாத்திரம் வெண்பாவா லமைத்திருக்கிறார். அகவலின் வெள்ளையினறைக வென்ற முந்து நூல் விதித்தமையுளவாகவும், விதியாது நீக்கிய கட்டளைக்கலித்துறை ஆசிரிய விருத்தமென்னும் பாவினத்தாற் பின் பிலக்கண நூல்செய்தோர் இலக்கணங்களைக் கூறியதுபோலவும், சிலப்பதிகாரத்திற் சிலகாதைகள் பாவினங்களாற் பாடியது போலவும் இவரும் முதலியலை வெண்பாவாலும் மற்றவற்றை நூற்பாவாலும் கூறினர். தண்டியலங்காரத்தில் மேற்கூறிய நான்கியலுக்கும் சேர்ந்த சூத்திரங்கள் 125 தான். தண்டியலங்கார உதாரணச் செய்யுள்களிலும் மாறனலங்கார உதாரணச் செய்யுள்கள் மிகவு மதிகம். ஆகவே தண்டியலங்காரத்தினும் மாறனலங்காரம் மிக்க விரிவுடையது. தண்டியலங்காரம் காவ்யாதர்சத்தைப் பின்பற்றின மொழிபெயர்ப்பு. மாறனலங்காரம், தொல்காப்பிய முதலியவற்றின் கருத்துக்களையும், “முதுமொழித்தண்டி முதனூலணியையும், புதுமொழிப் புலவர்புணர்த்தியலணியையும், தனாது நுண்ணுணர்வாற்றருபலவணியையும், மனாதுறத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும், சதுர்பெற விரண்டிடந்தழீஇய சார்பென”விளங்குகிறது. ஆயினும், இது தண்டியலங்காரத்தின் வழி நூலாகும். இதனுரையில் வடமொழித் தண்டியாசிரியரை யபூர்வமா யோரோரிடத்தும், தமிழ்த் தண்டியாசிரியரை அடிக்கடி பல இடங்களிலும் சுட்டியிருக்கிறார். இந் நூலாசிரியர் சிலஇடங்களிற் சிலநியாயம்பற்றிச் சிறிது வேறுபடுவதுமுண்டு. எடுத்துரைப்பிற் பெருகுமாதலால் 84ம் சூத்திரவுரை முதலிய இடங்களிற் கண்டுகொள்க. தண்டியலங்காரத்துட்கூறிய பொருளணிகளின்றொகை 35. இந் நூலுட்கூறிய அணிகளின்றொகை 64. இந்நூலார், தண்டியாசிரியர் |