கூறிய நுட்பமென்னுமலங்காரம் பரிகரத்துளடங்குதலா லதைக் குறைத்தார். சொல்லிலக்கணத்திலும் பொருளியலிலும் புறத்திணையியலிலுங் கூறியுள்ளவும் மற்ற அணிநூல்களுட் கூறப்படாதனவுமாகிய பூட்டுவில், இறைச்சிப் பொருள்கோள், பொருண்மொழியென்னும் மூன்றையும் செய்யுட்கணி செய்தலால் அணியுட் சேர்த்துமிகுத்தார். வகைமுதலடுக்கு, இணையெதுகை, உபாயம், உறுசுவை, புகழ்வதினிகழ்த லென்னுமைந்தும் அழகெய்துவதா யிருத்தலின், இலக்கியங்கண்டதற் கிலக்கணமியம்புதலாயிவற்றையு மிகுத்தார். தண்டியாசிரியர் உவமவிரியுட்சேர்த்தும், ஏனையாசிரியர் வேறுவேறாகப் புணர்த்துமிருக்கிற ஐயம், தெரிதருதேற்றம், பொதுநீங்குவமை என்பவற்றுள் ஐயத்தையும், தெரிதருதேற்றத்தையும், ஏனையாசிரியர்மதமுடன்பட்டுப் பிறிதோரணியாக்கியும், பொதுநீங்குவமையைத் தண்டியாசிரியர் மதம்பற்றி யுவமையுட்புணர்த்தும், தன்கோட் கூறலென்னுமுத்தியானும், தன்குறியிடுதலென்னுமுத்தியானும், பின்னோன்வேண்டும் விகற்பங்கூறி முடிக்கும் வழி நூலிலக்கணம்பற்றியும் இவ்வாறெல்லாம் முடித்தார். இவ்வாறு சூக்குமமாய்க் காணப்படும் வேறுபாடுகளுக்கெல்லாம் மேற்கண்டபடியே கொள்ளவேண்டும். தண்டியாசிரியர் ஒரே சூத்திரத்திற் பன்னிரண்டு சித்திரகவிகளுக்குப் பெயர்மாத்திரங் கூறிச்செல்ல, இந்நூலார் முப்பத்திரண்டு சித்திரகவிகள் கூறி அவற்றுக்கு இலக்கணமுங் கூறிச்செல்கிறார். ‘தேவா’ ‘மாதவனே’ ‘தண்மதி’ ‘சேடுறு’ என்றுதொடங்குகிற சக்கரபெந்தச் செய்யுள்களில் ‘திருமலை’, ‘தென்குருகூர்’, ‘வடமலையப்பன்’, ‘சீராமராமசெயம்’, ‘தருமமேகைதரும்’ என்பவைகளும் இரதபெந்தத்தில் ‘நாராயணாயநம’, என்பதும் காதைகரப்பிற் ‘கொல்லான்புலாலைமறுத்தானை’ என்னுங் குறளும் அழகாயமைக்கப் பட்டுள்ளன. தண்டியலங்காரவாசிரியர் தாமே மூலமும் உதாரணமுங் காட்டினாற் போல, இந்நூலாசிரியர் தாமே உதாரணச் செய்யுள்களும் செய்தமைத்தாரென்று தோன்றுகிறது. “இந்நூலாசிரியர் இவ்வுதாரணம் யாண்டுப் பெற்றாரோவெனின்” என்று உரையில்வருவது கொண்டும் பிற ஆதாரங்கொண்டு மிவ்வாறு ஊகிக்கவேண்டியதாயிருக்கிறது. இந்நூலிற் பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு, குறள், நாலடி, சிந்தாமணி, சிலப்பதிகாரம், வெண்பா |