வாழித்திருநாமம். இந்நூலாசிரியர் நம்மாழ்வாருடைய ஆஸ்தானகவிரா யராதலால் அவருக்குத் திருக்குருகைப்பெருமாள் கவிராயரென்று பெயராயிற்று. இவருக்குச் ‘சடையன்’ என்னும் இயற்பெயருமுண்டு. ‘சடகோபன்’ என்பது சடையன் எனத் திரிந்ததுபோலும். தகப்பனார் :- இவருடைய தகப்பனார் பெயரும் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’ என்பதேயாம். ஜாதி :- வேளாளர். ‘சீரகத்தார்வணிகன்’ என்று பாயிரத்திலிருப்பதை நோக்க வேளாளரும் ஒருவகை வைசியவகுப்பிற் சேர்ந்தவரென்பது வெளியாகின்றது. ஆழ்வார்திருநகரிக்கோயிற் சத்தாவரண உத்ஸவங்களிற் படிக்க வேண்டிய ‘திருப்பணிமாலை’ படிப்பவருக்கு ஏற்பட்ட சுதந்தரங்களைத் தெரிவிக்கும் கோயிற்கணக்கில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்றிருக்கிறது. அந்தச் சுதந்தரங்களை இப்போது வத்தராயிருப்பு ஆழ்வாரப்பபிள்ளை என்பவர் பெற்றுவருகிறது கொண்டு இந் நூலாசிரியர் இவரின் முன்னோராயிருக்கலாமென்று சிலர் நினைக்கின்றனர். ஆழ்வாரப்ப பிள்ளையின்பந்துவாகிய அமிர்தகவிராயரின் வம்சத்தில் ‘திருக்குருகைப் பெருமாள்கவிராயர்’கள் சிலரிருந்திருக்கின்றனர். சென்னை ராஜாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையிலுள்ள திருவரங்கத்தந்தாதியின் பழையவுரை யெழுதி வைத்தவர் திருக்குருகைப்பெருமாள் கவிராயர். இவர் இந்நூலாசிரியரல்லர். இவர் மாறன்கோவை இயற்றிய வேங்கடத்துறைவான் கவிராயர் வம்சத்தவராயிருக்க வேண்டும். இப் பெயரினர் ‘O.K.S.’ என்ற நவீனக்குறியால் வழங்கப்படுகிற திருநெல்வேலி ஜில்லா வைணவ வேளாள வகுப்பைச் சேர்ந்தவரென்று தெரிகிறது. ஊர் :- திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி. இவற்றிற்குப் பிரமாணம் :- |