என்னும் கவலைகொண்டவனாய்த் தன்னுள் சிந்திப்பவன் பொன்னில் பதிக்கவேண்டிய சிறந்த மாணிக்கத்தை உடையவன் ஈயத்தின்கண் பதித்து வைத்தாலும் யான் அங்கு இரேன் என்று அம்மணி மறுப்பதில்லை. அங்ஙனமே ஒரு பெண்ணினைப் பெற்றவர் அப் பெண்ணின் மாண்பிற்குப் பொருந்தாத ஒரு கயவனுக்கு மணம் செய்விப்பினும் அம்மகளிர் மறாது ஏற்றுக் கொள்கின்றனர். சிறந்த மகளிர் தம்மனம் பொருந்தாத கணவரொடு தம் தாய் தந்தையர் கூட்டிவைத்த வழி மனம் நொந்து நொந்தேனும் அவரோடு வாழ முயல்வரே யன்றி யாம் இவருடன் வாழமாட்டேம் என மறுத்தொதுங்குவார் அல்லர். ஆதலால் மகளிரை மணம் செய்விப்பதில் விழிப்புடனிருந்து அவர் மனத்தினை நன்கறிந்து அவர் விரும்பிய கணவருடன் அவரைக் கூட்டுவித்தலே நன்றாகும். ஏனெனில் காதல் என்பது ஒத்த அன்புடையோர் ஒருவரை யொருவர் கண்கூடாகக் கண்டு தாமே தேர்ந்து கொள்வதே யாகும் எனத் தன்னுட் சிந்தித்தான் என இக்காவியம் கூறுகின்றது. இக்கருத்து எத்துணைச் சிறப்புடையதாக அமைந்துளது காண்மின். இக் கருத்துரையை அம் மன்னனே கூறக் கேண்மின்.
 
                "பொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி
          இலங்கல மென்னல வீயஞ் சேர்த்தினும்
          குலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும்
          அலங்கலங் குழலிய ரன்றென் கிற்பரோ"

          "அந்தைதா முறுவது கருதி யாருயிர்த்
          தந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலர்
          சிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே
          நொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ"

          "காதலா லறிவது காமங் காதலே
          ஏதிலா ருணர்வினா லெண்ணத் தக்கதன்று"
 

என வருவன அக்கோமகனின் மொழிகளாம்.

இம்மன்னன் மகளாகிய சுயம்பிரபையின் நுண்ணறிவினைக் காட்டும் சொல்லாட்டம் ஒன்றனைக் காண்போம். சடிமன்னன் சுயம்பிரபையை விமானத்தில் அழைத்துக்கொண்டு தன் சுற்றமும் பரிவாரமும் சூழப் போதன நகரத்திற்கு வந்து அந்நகரப் புறத்தில் தமக்கென அமைத்துள்ள மாளிகையின்கண் தங்கியிருக்கின்றனன். அப்பொழுது திவிட்டனின் நற்யாகிய சசிதேவி சுயம்பிரபையைப் பார்த்து வரும்படி மாதவசேனை என்னும் தோழியை விடுத்தனள். அவளும் மங்கலப் பொருள்களோடே சுயம்பிரபையின் மாளிகையை யடைந்து அவளது பேரழகினைக் கண்டு