பெரிதும் வியப்பெய்தினாள்; சசிதேவிக்குக்
காட்டும் பொருட்டுச் சுயம்பிரபையின்
உருவத்தை ஒரு கிழியில் வரைந்துகொண்டு
அவள்பால் விடை பெற்றுப் புறப்படுபவள்
சுயம்பிரபையை நோக்கி, "இறைமகளே!
நும் மாமியாரடிகள் எம்மை நோக்கி நீயிர்சென்று
எம்மருகியை உங்கள்
கண்களே என் கண்ணாகக்கொண்டு கண்டு வாருங்கள் என்று எம்மை
ஏவினர்.
அவர் ஆணையின்படி யாங்கள் நின்னைக் கண்டு மீள்கின்றேம். ஆதலால்
யாங்கள் சென்று நின் மாமியாரடிகட்குக் கூறுதற் பொருட்டு ஏதேனும் ஒரு செய்தி
கூறியருளுதல் வேண்டும்," என்று வேண்டி நின்றாள். அது கேட்ட அக்கோமகள்
புன்முறுவல் பூத்தவளாய்த் தன் தோழியாகிய அமிர்தபிரபையை நோக்கினாள்.
சுயம்பிரபையின் குறிப்பினை நன்குணர்ந்த அவ்வமிர்த பிரபை மாதவசேனையை
நோக்கிக்
கூறுபவள் 'அன்புடையீர்! நீயிர் அங்குச் சென்றவுடன் மாமியாரடிகளை
யாங்கள்
வணங்குவதாக உணர்த்தி நும்முடம்பே எம்முடம்பாகக்கொண்டு
அவருடைய
இணையடிகளைத் தொழுமின், இதுவே யாங்கள் எம் மாமியாரடிகட்கு
விடுக்கும் செய்தி'
என்றாள். நுண்மாண் நுழைபுல முடைய இம் மகளிரின் இச்சொல்லாட்டம்
நமக்கு
எத்துணை இன்பம் நல்குகின்றன. கூர்ந்து நோக்குக.
இக் காப்பியத்தின்கண் வருகின்ற அச்சுவகண்டன் அரக்கனல்லனாயினும் ஒப்பற்ற
மறவோனாகவும் செருக்குடையவனாகவும் திகழ்கின்றான். இவன்பால் இவன்
சுற்றத்தார்களும் அமைச்சர்களும் எப்பொழுதும் மெய்ந்நடுங்கி நின்றே
உயிர்க்கின்றனர்.
அரிமஞ்சு என்னும் அமைச்சன் திவிட்டன் சிங்கத்தின்
உயிர் செகுத்ததனைத் தானே
நேரிற்சென்று அச்சுவகண்டனுக்குக் கூற அஞ்சியவனாய்
அரிகேது என்பவனை விடுத்தான்.
அவன்றானும் அச்சுவகண்டன் முன்சென்று செவ்வி
நோக்கித் திவிட்டனின் இவ்வீரச்
செயலைச் செப்பினான். அது கேட்டவுடன்
அவ்வச்சுவகண்டனுடைய நிலைமையினையும்
அவன் மறவுரைகளையும் நோக்குமின்.
|