முன்னுரை

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்:- இஃது திருந்செந்தூரில்
எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான்மீது பாடப் பெற்ற பிள்ளைத்தமிழ்
என விரியும். திருச்செந்தூர் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. பிரபாகரன் மகன்
சூரபன்மனை ஆறுமுக வடிவில் அமர்ந்து, உமையம்மை உதவிய சத்திவேல் கொடு அழித்தொழித்த இடம். இது தலம், தீர்த்தம், மூர்த்தியாகிய
மூன்றாலும் சிறந்தது. இப்பிள்ளைத் தமிழ் பாடியவர், பகழிக் கூத்தர்
என்பவர். 

பகழிக் கூத்தர் வரலாறும், பிள்ளைத்தமிழ்ப் பெருமையும்:- இவர்
சேதுமன்னர் அரசாட்சிக் குள்ளாகிய செம்பிநாட்டைச் சேர்ந்த சன்னாசிக்
கிராமத்தில் பிறந்தவர். இது சதுர்வேத மங்கலம் என்றும் அழைக்கப்படும்
காமங்கோட்டைச் சேகரத்தைச் சார்ந்துள்ளது. இவர் வைணவப் பார்ப்பன
மரபினர். இவர் தந்தையார் தர்ப்பாதனர். இவர் வேதாமங்களையுணர்ந்து
மெய்ப்பொருளை யறிந்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கசடறக்
கற்றபெரும் புலவர். இவர் தமக்கு ஏற்பட்ட வயிற்று வலிக் கொடுமை
பொறுக்கலாற்றாது வருந்தினர். பின், தெய்வத் திருவருளால் திருச்செந்தூரில்
எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானைப் பாடி தம் நோயைத்
தீரத்துக்கொள்வதாக உறுதி கொண்டு இப்பிள்ளைத் தமிழ் நூலைப்பாடி
முடித்தனர். முருகன் அருளால் நோயும் நீங்கிற்று திருச்செந்தூர் சென்று
முருகனை வழிபட்டு அவர் சந்நிதியிலே. புலவர்கள் அடியார்கள்,
திரிசுந்தரர்கள் (முக்காணிகள்) குழுமியிருக்க அரங்கேற்றி மகிழ்ந்தனர்.