02
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு
அணிந்துரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சிற்றலக்கியங்கள் செல்வாக்கு மிகுந்து விளங்கின. தமிழ் பயிலும் மாணவர்கள் சில சிற்றிலக்கிய நூல்களைத் தொடக்கம் முதலாகப் படிப்படியே கற்றுத் தமிழ்ப்புலமை எய்தினர். இவ்வாறு பயிலப்பட்ட சிற்றிலக்கியங்கள் சிலவே ஆகும். பெருகிய நிலையில் தோன்றியுள்ள சிற்றிலக்கியங்கள் மாணாக்கர்களால் முறையாகப் பயிலப் பெறவில்லை. சிற்றிலக்கியச் செம்மல்களாகப் பலர் போற்றப் பெற்று வந்துள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகத் தெய்வத்திரு.குமரகுருபரசுவாமிகள் விளங்குகிறார்கள்.
குமரகுருபரர் ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் என்பவருக்கும் சிவகாம சுந்தரி அம்மையாருக்கும் அருமகவாகத் தோன்றியவர். இவர் வரலாறு தோன்றுகின்ற காலத்திலேயே இவருடைய இலக்கிய வரலாறும் தோன்றியது எனலாம். ஐந்து வயதுவரை பேசாதிருந்த குமரகுருபரரைப் பாரர்த்து பெற்றோர்கள் பெரிதும் துன்புற்றனர். முருகனிடத்தில் பெரிய ஈட்பாடு கொண்ட பெற்றோர்கள் குமரகுருபரனாகிய குழந்தையை எடுத்துக்கொண்டு திருச்செந்தூருக்குச் சென்றனர். செந்தில் ஆண்டவர் சந்நிதியில் குழந்தையை வளர்த்தி விட்டு முருகப்பெருமானிடத்தில் முறையிட்டனர். முருகன் அருளால் பேசுகின்ற ஆற்றல் மட்டுமின்றி, கவிபாடும் ஆற்றலும் இவருக்கு வாய்த்தது என்பர். பேசத் தொடங்கிய உடனேயே அவ்வருளைச் செய்த முருகப்பெருமான் மீது கந்தர் கலிவெண்பா என்னும் நூலினைச் செய்தனர் என்பது இவர் வரலாற்றில் காணப்படும் செய்தியாகும்.
 
குமரகுருபரர் தருமையாதீனம் நான்காம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் என்பவரைத் தம் ஞானகுருவாகப் பெற்றவர். குமரகுருபரர்க்குக் கல்லாடை கொடுப்பதற்கு முன்னர் திருத்தலப் பயணம் மேற்கொள்ளுமாறு தம் ஆசிரியரால் பணிக்கப்பெற்றார். திருத்தலப் பயணத்திற்குரிய தலமாகத் தில்லை தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி, தில்லையில் சிலகாலம் தங்கி இருப்பதற்கு வரும்வழியில் புள்ளிருக்கு வேளூர் என்னும் இடத்தில் இறைவனை வழிபட்டுத் தங்கி இருந்தார். அக்கால எல்லையில் இவர் புள்ளிருக்கு வேளூரில் கோயில் கொண்டு அருளியிருக்கும் முத்துக்குமாரசுவாமி மீது ஒரு பிள்ளைத்தமிழ் பாடினார். இந்நூல் செய்வதற்கு முன்னர் மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மைமீது மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் பாடிச் சிறப்புப பெற்றார். அந்நூல் அரங்கேறுகின்ற காலத்தில் மீனாட்சி அம்மையே குழந்தை வடிவாக வந்து கேட்டு மகிழ்ந்தாள் என்பது இவர் வரலாற்றில் காணப்படும் செய்தியாகும். இந்நூல் திருமலை நாயக்கர் காலத்தில் அரங்கேற்றப் பெற்றதாகும். இந்நூலின் முத்தப்பருவத்தை