அரங்கேற்றிக் கொண்டிருக்கும் போது தம் திருக்கழுத்தில் இருந்த முத்துமாலை ஒன்றைக் குமரகுருபரர் கழுத்தில் அணிவித்துவிட்டு அம்மை மறைந்தாள் என்பர். இப்பிள்ளைத் தமிழ் அரங்கேற்றத்தைக் கேட்டு மகிழந்த திருமலை நாயக்கர் குமரகுருபரர்க்குப் பல வகையான பரிசுப்பொருள்களை அளித்துச் சிறப்பித்தார். எனவே, அத்தகைய பிள்ளைத்தமிழைப் பாடிய பயிற்சியால் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழும்; அந்த அளவு சிறப்புடையதாகவே கருதப்படுகின்றது. இன்றளவும் பிள்ளைத்தமிழ் என்று சொன்னவுடன் எல்லோர் நினைவிற்கும் முதலில் வருவது மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழே ஆகும்.
|
மாசிலாமணி தேசிகரை அடுத்து, கல்லாடை பெற வேண்டுமென்று நினைப்பதற்கு முன்னால் குமரகுருபரர் திருவாரூரில் சிலகாலம் தங்கி இருந்தார். திருவாரூர் இறைவர் ஆகிய தியாகேச பெருமானிடத்தில் மிக்க ஈடுபாடு உள்ளவராக விளங்கினார். அங்குத் தங்கி இருந்த கால எல்லையில் திருவாரூர் நான்மணிமாலை என்னும் அழகிய நூலை இயற்றி அருளினார்.
|
தம் ஆசிரியரின் ஆணையை ஏற்றுச் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்து, நாள்தோறும் கூத்தப் பெருமானைக் கண்டு மகிழந்தார். நடராஜப் பெருமான்மீது சிதம்பர மும்மணிக்கோவை என்னும் நூலை இயற்றினார்.
|
இலக்கணங்களை இலக்கியமாகக் கற்றால், எளிதாக இருக்கும் என்பது குமரகுருபரரின் கோட்பாடாகத் தெரிகிறது. யாப்பிலக்கணத்திற்குச்சிறந்த நூலாகத் திகழந்த யாப்பருங்கலக்காரிகை நூலில் காணப்படும் அனைத்துவகை இலக்கணங்களுக்கும் செய்யுள் வடிவ உதாரணங்களை இயற்றி அருளிய பெருமை இவருக்கே உரியதாகும். |