|
06
|
குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு
|
|
குமரகுருபர சுவாமிகளின் பிரபந்தங்கள் என்னும் இத்தொகுப்பு நூலை ஐயர் அவர்கள் செம்பதிப்பாகப் பதிப்பித்த வண்ணமே அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இப்பொழுது வெளியிடுகின்றது என்பது பெருமைக்குரிய செய்தியாகும். மாணவர்களுக்கும், புலவர் பெருமக்களுக்கும் பெரிதும் பயன்படுவதற்குரிய இந்நூலை மறுபதிப்பாகக் கொண்டுவர வேண்டும் எனத் திருவுளம் கொண்ட தவத்திரு. முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் அப்பொறுப்பினை இப்பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்தார்கள். தவத்தோர் அடைக்கலம் போன்ற அப்பொறுப்பினை அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீட்டுத் துறை ஏற்றுச் செம்மையாகச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். காசிமடம் திருப்பனந்தாள் அறக்கட்டளையின் சார்பில் இந்நூல் வெளிவருகிறது என்பது இதன் சிறப்பினை மேலும் மிகுவிப்பதாகும். அரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், தமிழையும், தமிழ் இசையையும் தம் இரு கண்களெனப் போற்றி வளர்த்தார்கள். “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” என்னும் தொடருக்கு ஏற்ப தம் தந்தையாரின் கருத்துக்களை நடைமுறைப் படுத்துவதில் அரசர் முத்தையச் செட்டியார் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்கள். அவர்களின் பெரும்பணி தமிழ்மக்களால் என்றும் நன்றியுடன் நினையத் தகுவதாகும். இதுபொழுது, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தராக டாக்டர் எம்.ஏ.எம். இராமசாமி அவர்கள் திகழ்கிறார்கள் பேராற்றலினால், பாட்டனாரையும், கருணையால், தந்தையையும் ஒத்து விளங்கும் இவர்கள் தமிழுக்கும், தமிழ் இசைக்கும் பேராதரவு நல்கி வருகிறார்கள். இந்நூல் வெளிவருவதற்குக் காரணமாய் இருந்த துணைவேந்தர் பேராசிரியர் இராம.சேது நாராயணன் அவர்களுக்கும் ஆட்சிக்குழுவிற்கும் என் நன்றியை புலப்படுத்திக் கொள்கிறேன். தமிழ் மாணவர்களும், தமிழ் பெருமக்களும் இந்நூலை ஏற்று போற்றுவார்களாக.
|
அண்ணாமலை நகர், |
டாக்டர். ஆறு.அழகப்பன், |
8-4-88 |
தமிழ்த்துறைத் தலைவர், |
|
அண்ணாமலைப் பல்கலைக்கழகம். |
| |