குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு
05
வேண்டுகோளாகக் கலைமகள்பால் வேண்டிய வேண்டுகையே சகலகலாவல்லி மாலையாகும்.
பாதுஷாவின் முழுமையான ஆதரவு காரணமாகக் காசியில் குமாரசாமிமடம் என்ற ஒரு மடாலயத்தைச் சிறப்பாக உருவாக்கினார். அம்மடத்தின் ஒரு பகுதியில் புராணங்களையும், இலக்கியங்களையும் தமிழ், இந்துஸ்தானி ஆகிய இரு மொழிகளிலும் சொற்பெருக்காற்றினார். இராமாயணச் சொற்பொழிவுகள் நிகழ்ந்ததும் உண்டு. கம்பனின் தனித்திறம் தமிழ் இராமாயணத்தில் தெரிவதோடு அல்லாமல் துளசிதாஸ் இராமாயணத்திலும் காணப்படுவதற்குக் குமரகுருபரசுவாமிகளின் சொற்பொழிவுகளே காரணம் என்று கூறுகின்றனர். காசியில் தங்கியிருக்குங்கால், காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் இவரால் இயற்றப்பெற்றன.
குமரகுருபர சுவாமிகளுடைய சிற்றிலக்கிய நூல்களாக 1. கந்தர்கலிவெண்பா. 2. மீனாட்சிஅம்மை பிள்ளைத்தமிழ், 3. மதுரைக்கலம்பகம், 4. நீதிநெறிவிளக்கம், 5. திருவாரூர் நான்மணிமாலை, 6. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ், 7. சிதம்பர மும்மணிக் கோவை, 8. சிதம்பரச் செய்யுட்கோவை, 9. பண்டார மும்மணிக் கோவை. 10. காசிக் கலம்பகம், 11. சகலகலாவல்லி மாலை, 12. கயிலைக் கலம்பகம், 13. காசித்துண்டி விநாயகர் பதிகம் என்னும் நூல்களாகக் காணப்படுகின்றன.
இப்பதின்மூன்று நூல்களுள் கைலைக் கலம்பகமும், காசித்துண்டி விநாயகர் பதிகமும் உரிய நிலையில் கிடைக்கவில்லை என்பதைப் பதிப்பு வேந்தர் டாக்டர். உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார்கள். எனவே, ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் பிரபந்தங்கள் எனப் பெயரிய டாக்டர் உ.வே.சுவாமியாத ஐயருடைய மிகச் சிறப்பான பிரபந்தத் திரட்டு 1939-ல் வெளிவந்துள்ளது.
ஐயர் அவர்களுடைய பதிப்பில் குமரகுருபரசுவாமிகளின் தனிச்செய்யுட்கள் சில அச்சிடப் பெற்றுள்ளன. நீதிநெறி விளக்கத்தின் சிறப்புப் பாயிரம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குமரகுருபரசுவாமிகளின் சரித்திரச் சுருக்கமும், ஐயர் அவர்களுக்கே உரிய ஆராய்ச்சி முன்னுரையுடன் திகழ்கிறது. நூல்களின் கீழ்க் குறிப்ப்க்களாக அருஞ்சொற்பொருள் விளக்கம் ஒத்த இடம் கூறல் போன்ற குறிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நூல்களைப் படிப்பார்க்கு இவை பேருதவி புரியும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமிலைலை. இறுதியில் செய்யுள் முதற்குறிப்பு அகராதியும் இடம் பெற்றுள்ளது. இப் பிரபந்தத்திரட்டில் எண் குறிப்பிடப் படாமல் மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை, மதுரை மீனாட்சி அம்மை குறம், தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை என்ற மூன்று நூல்கள் இடம்பெற்றுள்ளன. ஐயர் அவர்களுடைய காலத்திற்கு முன்பு அச்சுவடிவம் பெற்ற நூல்களில் குமரகுருபர சுவாமிகள் இயற்றியனவாக இந்நூல்கள் காணப்பட்டதால் அவற்றை இத்திரட்டில் சேர்த்துள்ளதாக ஐயர் அவர்கள் தம் முன்னுரையில் குறித்துள்ளதோடு அம்மூன்று நூல்களும் குமரகுருபரர் வாக்கு அல்ல என்பதற்குப் போதிய சான்றுளையும் கொடுத்துள்ளார்கள்.