பக்கம் எண்: - 208 -

அரசாண்டுவந்த பரராசசிங்கனைத் தம் பாடல்களால் மகிழச் செய்து சிறந்த பரிசுகள் பெற்றார்.

      பிற்கால1த்தில் பலவாக வளர்ந்த இலக்கிய வகைகளைப் பாடுவதில் இவர் தேர்ந்தவர். பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா ஆகியவை இவர் பாடியுள்ளார். திருக்கழுக்குன்றத்தைப் பற்றிய தலப்புராணம் ஒன்றும் இவர் இயற்றியுள்ளார். இவர் பாடிய உலாநூல்கள் இரண்டு. ஒன்று ஓர் அரசனைப்பற்றிய உலா நூல்; மற்றொன்று திருவாரூர்ச் சிவபெருமானின் உலாபற்றியது. பின்னதே சிறப்புடையதாகப் புகழ் பெற்றது. திருவாரூர் உலா என்னும் அந்த நூலே, உலா நூல்களுள் மிக இனிமையானது, உயர்ந்தது என்று கருதப்படுகிறது. இவை தவிர, இவர் அவ்வப்போது கடிதங்கள்போல் பிறர்க்கு எழுதியனுப்பிய கவிதைகள் பல உண்டு; அவை சீட்டுக்கவிகள் எனப்படும், அவைகளும் சுவை மிகுந்தவை; கற்பனை மெருகு அமைந்தவை.

அதிமதுரகவி முதலானோர்

      காளமேகப் புலவரின் காலத்தில் வாழ்ந்து புகழ்பெற்ற மற்றொரு கவிஞர் அதிமதுரகவி என்பவர். அவருடைய கவிதைகளும் கற்பனைச்சுவை மிகுந்தவை.

      அந்தக் காலத்துப் புலவர்கள் பலர்க்கு, நல்ல சொல்வளமும் கற்பனைத் திறனும் அமைந்திருந்தன. ஆயினும் அவர்கள் புதிய நூல்களைப் படைத்து மகிழ்ச்சியோடு வாழ முடியவில்லை. வாழ்க்கையில் வறுமை அவர்களை வாட்டியது. தம் பாடல்களை மக்களிடம் பாடி அதனால் வயிறு வளர்க்க முடியாத நிலை இருந்தது. செல்வர்களைப் புகழ்ந்து பாடி அவர்களின் பொருளுதவி பெறவும் முடியவில்லை. மனம் மகிழ்ந்து புலவர்களைப் போற்றிக் காக்கும் வள்ளல்களும் அக்காலத்தில் இல்லை. அதனால் மனம் நொந்து வாடிய புலவர்களின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம் :

       கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன்
      காடெறியும் மறவனைநா டாள்வாய் என்றேன்
      பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன்
      போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
      மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை
      வழங்காத கையனைநான் வள்ளல் என்றேன்
      இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
      யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே.

      “காலம் எல்லாம் பலரைப் புகழ்ந்து பாடினேன்; இல்லாதவை எல்லாம் சொல்லிப் பாடிவந்தேன்; எனக்குக் கிடைத்த மறுமொழியும் இல்லை