என்பதுதான் (கொடுக்கப்பட்ட பொருள்
இல்லை, கொடுப்பதில்லை)” என்று சொல்லிப் புலவர் தம் வறுமைக்காக வருந்தினார்.
தொல்காப்பியத் தேவர் என்பவர்
ஒரு கலம்பக நூல் பாடினார். அது திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தில் உள்ள தெய்வம்பற்றிப்
பாடியது. சுவை மிகுந்த இலக்கியமாக ஒரு காலத்தில் அது கருதப்பட்டு வந்தது. இரட்டைப்
புலவர்களாலும் அது புகழப்பட்டது.
திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
என்பவர் நம்மாழ்வாரிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவர் அகப்பொருள்பற்றிய இலக்கண
நூல் ஒன்றும் அணியிலக்கணம்பற்றிய நூல் ஒன்றும் இயற்றி, மாறன் என்ற நம்மாழ்வாரின்
பெயராலே வழங்கினார். மாறனகப்பொருள், மாறனலங்காரம் என்பவை அந்நூல்களின் பெயர்கள்.
அவை அல்லாமல் சில செய்யுள் நூல்களும், சிறு இலக்கியங்களும் இயற்றினார்.
மடங்கள்
சைவ சமயத்தைக் காப்பதற்காக ஏற்பட்ட
சைவமடங்கள் சமயத்துறையில் பணி பல புரிந்ததோடு, தமிழிலக்கியத்தை வளர்த்துப் போற்றுவதிலும்
ஆர்வம் செலுத்திவந்தன. பழைய நூல்களைக் காப்பதற்கும் புதிய நூல்களைப் படைப்பதற்கும்
அந்த மடங்கள் ஆதரவு தந்தன. அந்த அமைப்புகளுக்குத் தலைமை பூண்டு விளங்கிய சிலர்,
தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களாகவும் அவற்றை ஆராய்வதில் ஈடுபாடு கொண்டவர்களாகவும்
இருந்தார்கள். அதனால் புலவர் பலர், மடங்களைச் சார்ந்து வாழ வாய்ப்பு இருந்தது.
சென்ற சில நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற புலவர்கள் சிலர், மடங்களைச் சார்ந்தவர்களாக
இருந்ததற்குக் காரணம் அதுவே. அவர்கள் மடங்களில் தங்கிப் பலர்க்குத் தமிழ் நூல்களைக்
கற்பித்து இலக்கியத்தொண்டு புரிந்துவந்தார்கள். அவர்களைப் போற்றி ஆதரவு தந்துவந்த
மடங்களின் தலைவர்களும் சில சமய நூல்களை இயற்றியுள்ளனர்; அந்தப் புலவர்களும் பல
நூல்களை இயற்றியுள்ளனர். பதினான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட திருவாவடுதுறை மடத்திலும்,
தருமபுர மடத்திலும் வாழ்ந்த புலவர்கள் இயற்றிய நூல்கள் சில, இலக்கிய வாழ்வு உடையவை;
அவர்களுள் சிலர் பழைய நூல்களுக்கு உரைகளும் எழுதினார்கள். திருவண்ணாமலை மடமும், துறைமங்கல
மடமும் வீரசைவ சமயத்தைச் சார்ந்தவை. அவைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத்
துணை புரிந்தன.
குமரகுருபரர்
தருமபுர மடத்தைச் சார்ந்த புலவர்களுள் பெரும்புகழ் பெற்று
|