xl

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

பதிப்பாளர் இளவழகன்

இளவழகன், கோவிந்தசாமி - அமிர்தம் அம்மையாருக்கு மூத்த மகனாக 2.9.1946-ல் பிறந்தார்; தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி இரண்டையும் உறந்தைராயன்குடிக்காட்டிலேயே பயின்றார்; தொடக்கம் முதலே தமிழில் ஆர்வம் உடையவர்; 1965-ல் நடந்த இந்தியெதிர்ப்புப் போரில் பங்குகொண்டு சிறை சென்றவர்; தமிழ்நாட்டரசால் ‘தமிழ்மொழி காவலர்‘ விருதளிக்கப் பெற்றவர்; பாவாணருடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்; ‘பாவாணர் அச்சகம்‘ என்னும் பெயரில் அச்சகம் நிறுவியவர். ‘கிழையியல் ஆய்வு நிறுவனக் கல்வி அறக்கட்டளை‘ தொடங்கி அதன் சார்பில் பல நற்பணி செய்து வருபவர்.

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் 1917-ல் வெளியிட்ட கருணாமிர்த சாகரம் என்னும் இசைத்தமிழ் நூலை 1995-ல் தஞ்சையில் நடந்த 8ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் மறுபதிப்பாய்த் தமிழக முதல்வரைக் கொண்டு வெளியிட்டார். இந்தப் பணியினால் பேரிழப்புக்கு ஆளானவர்.
பாவாணர் நூல் மறுபதிப்பு
தமிழ் ஆர்வம் என்னும் ஒன்றையே முதலாகக் கொண்டு ஒரு பெரும் பணியை ஏற்றுக்கொண்டு பாவாணர் படைப்பு முழுவதையும் வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளார்; தக்க பலரை அமர்த்தி அயராது பாடுபட்டும் வருகிறார்; நூல்கள் செம்மையாக வெளிவரும் என்னும் நம்பிக்கையும் கொண்டுள்ளார்.
உறந்தைராயன்குடிக்காடு
தஞ்சைப் பட்டுக்கோட்டைப் பெரும்பாட்டையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இந்தச் சிற்றூரில்தான் பதிப்பாசிரியரும் பதிப்பாளரும் பிறந்தனர்; வளர்ந்தனர்; கல்வி கற்றனர்; தொண்டாற்றினர். இவ் வூரில் 1954-ல் 'ஊர் நலன் வளர்ச்சிக் கழகம்‘ என்று ஒரு நற்பணிக் கழகம் தொடங்கப்பட்டுப் பல நற்பணிகளைப் புரிந்தது.
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே" (புறம்.187)
கழகத்தின் பணிகளுள் சில
1. நாற்பத்தைந்து ஆண்டுகட்கு முன்னரே தை மூன்றாம் நாளன்று வள்ளுவர் விழாக் கொண்டாடி வந்தது. அன்று, அவ்வாண்டில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டியது. பள்ளிக் குழந்தைகளுக்குத் திருக்குறள் போட்டி வைத்துப் பரிசு வழங்கியது.
2. ‘குடி குடியைக் கெடுக்கும்‘,
‘ஈன்ற அன்னையும் ஏறெடுத்துப் பாரான்‘,
‘சான்றோர் மதிக்க மாட்டார்‘
என்பதனை உணர்ந்து குடியை ஒழிக்க அரும்பாடுபட்டது; உரத்தநாட்டு மதுவொழிப்புத் திட்டத்திற்கு வித்தூன்றியது.