இது பதின்சீர்க்கழிநெடிலடியான் வந்த செய்யுள். பிறவும் வந்துழிக் கண்டுகொள்க. “பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி வாலெயி றூறிய நீர்” இஃது இரண்டடியான் வெண்பாவிற்குச் சிறுமைவந்தவாறு “முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னொள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே” இது மூன்றடியான் ஆசிரியப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. “செல்வப்போர்” இது நான்கடியாற் கலிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. “செங்கண்மேதி கரும்புழக்கி யங்கணீலத் தலரருந்திப் பொழிற்காஞ்சி நிழற்றுயிலும் செழுநீர்-நல்வயற் கழனி யூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே” இது மூன்றடியான் வஞ்சிப்பாவிற்குச் சிறுமை வந்தவாறு. பிறவுமன்ன. இனி, “எழுத்தசைசீர்............செந்தொடையே” என்பதற்குதாரணம். அந்தாதித்தொடை வருமாறு:- “உலகுடன் விளக்கு மொளிதிக ழவிர்மதி மதிநல னழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழற் பொற்புடை யாசனம் ஆசனத் திருந்த திருந்தொளி யறிவன் ஆசனத் திருந்த திருந்தொளி யறிவனை யறிவுசே ருள்ளமோ டருந்தவம் புரிந்து துன்னிய மாந்தரஃ தென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே” இது நான்கந்தாதித் தொடையும் வந்த செய்யுள். இனி இரட்டைத்தொடை செந்தொடைகள் வருமாறு:- |