இஃது அடிதோறும் முதற்சீர் மறுதலைப்படத் தொடுத்தமையால் அடிமுரண்டொடை. “ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோ டீஇ ரிரைகொண் டீரளைப் பள்ளியுட் டூஉந் திரையலைப்பத் துஞ்சா திறைவன்றோள் மேஎ வலைப்பட்ட நம்போ னறுநுதால் ஓஒ வுழக்குந் துயர்.” இஃது அடிதோறும் அளபெடுத்தொன்றிவரத் தொடுத்தமையால் அடியளபெடைத்தொடை என வரும். இனி இணைமோனை முதலாகிய தொடை வருமாறு. “அணிமல ரசோகின் றளிர்நலங் கவற்றி அரிற்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி அகன்ற வல்கு லந்நுண் மருங்குல் அரும்பிய கொங்கை யவ்வளை யமைத்தோள் அவிர்மதி யனைய திருநுத லரிவை அயில்வே லனுக்கி யம்பலைத் தமர்த்த கருங்கய னெடுங்க ணோக்கமென் திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே.” இதனுள் இணைமோனை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க. “மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே மற்றத னயலே முத்துறழ் மணலே நிழலே யினியத னயலது கடலே மாதர் நகிலே வல்லே யியலே வில்லே நுதலே வேற்கண் கயலே பல்லே தளவம் பாலே சொல்லே புயலே குழலே மயிலே யியலே அதனால் இவ்வயின் இவ்வுரு வியங்கலின் எவ்வயி னோரு மிழப்பர்தந் நிறையே.” |