“கொன்றை வேந்தன் செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோம் யாமே.” இவை, ஒழுகியவோசையும் விழுமியபொருளும் பெற்று, இரண்டடியுந்தம்முள்ளொத்து வந்தமையால் வெண்செந்துறை. “நண்ணுவார்வினை நையநாடொறு நற்றவர்க்கர சாயஞானநற் கண்ணினானடியே யடைவார்கள் கற்றவரே” எனவும், “நீலமாகடல் நீடுவார்திரை நின்றபோற் பொங்கிப் பொன்று மாங்கவை காலம்பல் காலஞ்சென்றபின் செல்வர் யாக்கை கழிதலுமே” எனவும், இவை, பலசீரா யீற்றடிகுறைந் திரண்டடியாய் வந்தமையாற் குறட்டாழிசை. உரைத்தவிரண்டுங் குறட்பாவினமே. “நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யா ரன்பு வேண்டு பவர்.” இது, மூன்றடியா யீற்றடிமுச்சீராய்ப் பிறதளைவிரவி வெண்பாப்போல முடிந்தமையால் வெண்டாழிசை. “குழலிசைய வண்டினங்கள்கோழிலைய செங்காந்தட் குலைமேற்பாய வழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென்றயல்வாழ் மந்தி கலுழ்வனபோ னெஞ்சயர்ந்து கல்லருவி தூஉ நிழல்வரை நன்னாட னீப்பனோ வல்லன்.” இது, நான்கடியா யீற்றடியிரண்டுஞ் சீர்குறைந்து வந்த ஓரொலிவெண்டுறை. “ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா ரொருசாரார் கூகூ வென்றே கூவிளி கொண்டா ரொருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தா ரொருசாரார் ஏகீர் நாகீ ரென்செய்து மென்றா ரொருசாரார்.” எனவும், “கொண்டன்முழங்கினவாற்கோபம்பரந்தனவா லென்செய்கோயான வண்டுவரிபாட வார்தளவம் பூத்தனவா லென்செய்கோயான் எண்டிசையுந் தோகை யியைந்தகவி யேங்கினவா லென்செய்கோயான்.” எனவும், இஃதடிதோறும், நாற்சீராய் நான்கடியாலு மூன்றடியாலும் வந்து அடிதோறு மிறுதியிலே யொருசொல்லே தனிச்சொல்லாக வந்தமையால் வெளிவிருத்தம். (2) |