மிகலே யவற்றின் குறியாம் வேறே” “மாத்திரை வகையாற் றளைதம கெடாநிலை யாப்பழி யாமையென் றளபெடை வேண்டும்” “கண்ணிமை கைந்நொடி யளவே மாத்திரை நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே” “உன்னல் காலே யூன்ற லரையே முருக்கல் முக்கால் விடுத்த லொன்றே” “மூன்றுயி் ரளபிரண் டாநெடி லொன்றே குறிலோ டையௌக் குறுக்க மொற்றள பரையொற் றிஉக் குறுக்க மாய்தங் கால்குறண் மஃகா னாய்த மாத்திரை” எனவரும். பிறவுமன்ன. “நெடில்குறில்க டனித்துமொற்றை யடுத்தும்வரி னேராம் சாய்ப்பரிய குறிலிணைகள் குறினெடில்க டனித்துந், தமதுடனொற் றடுத்தும்வரி னிரை யசையு மாமே”...என்றது நெட்டெழுத்துத் தனியே வரினும் குற்றெழுத்துத் தனியேவரினும், நெட்டெழுத்து ஒற்றடுத்துவரினும் குற்றெழுத்து ஒற்றடுத்துவரினும் நேரசையாம்; குறில் இணைந்து வரினும் குறினெடில் இணைந்துவரினும், குறிலிணை ஒற்றடுத்துவரினும், குறினெடில் ஒற்றடுத்துவரினும் நிரையசையாம் என்றவாறு. ஆ- என நெட்டெழுத்துத் தனியே வந்த நேரசை. ழி- எனக்குற்றெழுத்துத் தனியேவந்த நேரசை. செல் - எனக் குற்றெழுத்து ஒற்றடுத்து வந்த நேரசை. போர் - என நெட்டெழுத்து ஒற்றடுத்து வந்த நேரசை. சின - எனக் குறில் இரண்டிணைந்து வந்த நிரையசை. ததை - எனக்குறினெடில் இணைந்துவந்த நிரையசை. எழில் - எனக்குறிலிணை ஒற்றடுத்துவந்த நிரையசை. சுலாம் - எனக்குறினெடில் ஒற்றடுத்து வந்த நிரையசை. இவற்றுக்கு உதாரணம்:- “செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ விடைநுழையு மதியம்போன் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.” எனவரும். இதில் நேர்நிரை கண்டுகொள்க. “அசையும்” என்ற உம்மையால், நேர்பசை நிரைபசை என்னும் இரண்டுங்கூட்டி அசை நான்கென்பாரு முளர். (1) |