ஈண்டு நோக்குக. இஃது இக்குறிப்புரையில் முன்னர் எடுத்துக் குறிக்கப்பெற்றுளது.
தமிழ் இலக்கண நூலார் அன், ஆன், அள், ஆள், அர், ஆர், கள் முதலியவற்றை இறுதிநிலைகளாக (விகுதிகளாக)க் கொள்வதன்றி முதல் வேற்றுமையுருபுகளாகக் கொள்ளார் என்பதனைக் கருதிப் பிரயோக விவேக நூலார், தம்மதமாகக் கூறிய 'தேற்றுந் தமிழுக்கு' என்று தொடங்கும் 7-ஆம் பாட்டில்.
'தேற்றுந் தமிழுக் கெழுவாய் விபத்தி திரிபில்பெயர்'
என்று கூறி, அக்கருத்து நன்கு விளங்க உரையும் எழுதினர். அஃது இந்நூலின் 30-ஆம் பக்கத்தில் அடிக்குறிப்பாகக் காட்டப்பெற்றிருக்கின்றது.
இப்படலத்தில் 6-ஆம் பாட்டின் உரையில், 'வேளாளரை, நாட்டாரை, வேளாளர்களை, நாட்டார்களை தவசிகளை, நம்பிமாரை என்புழி இரண்டாம் வேற்றுமையின் முன்பு எழுவாய் வேற்றுமையின் உருபுகள் வந்தவாறு காண்க,' என்றதை நோக்குக.
மேற்காட்டப்பட்ட உதாரணங்களில் இரண்டாம் வேற்றுமையின் உருபாகிய ஐ என்பதற்கு முன் அர், ஆர், அர்கள், ஆர்கள், கள், மார் என்னும் முதல் வேற்றுமையின் உருபுகள் வந்திருத்தலை அவற்றைப் பிரித்தறிக. இவற்றிற்கு முன்னே சாத்தனை அழைத்தான், கொற்றியைக் கொடுத்தான், கடலை நீந்தினான் எனக் காட்டப்பட்ட உதாரணங்களுள் இரண்டன் உருபுக்கு முன் இம்முதல் வேற்றுமை உருபுகள் வந்திலாமையையும் இவற்றுள் அவை வந்திருத்தலையும் ஆய்ந்தறிக. இங்ஙனமே எட்டாம் வேற்றுமை ஒழிந்த மற்ற மூன்று முதலிய வேற்றுமை உருபுகள் தமக்குமுன் இம்முதல் வேற்றுமை உருபுகளைப் பெறாமலும் பெற்றும் வருதலை அந்த அந்த வேற்றுமைகளுக்குக் காட்டப்படும் உதாரணங்களை நோக்கி அறிக.
இனி இப்படலத்தின் 9-ஆம் பாட்டினும், அதன் உரையினும் தன்மைப் பெயர்க்கும், முன்னிலைப் பெயர்க்கும், வினாப்பெயர்க்கும், தன் என்னும் பெயர்க்குங் கூறப்பெற்ற விதிகளை நன்காய்ந்து அறிந்து கொள்க.
வேற்றுமைப் படலத்தின் குறிப்புரை முற்றிற்று.