பக்கம் எண் :
 
294

மேற்கோட்செய்யுள் உள்ள 41-ஆம் பக்கத்தினது அடிக்குறிப்பையும் ஈண்டு நோக்குக.

கருத்தாக் காரகம் ஐந்தனுள் தான் தெரி கருத்தாவுக்கு

'விழுமியோராற் செய்யப்படாநின்றது நன்மை.'
'சாத்தனால் எறியப்பட்டது கல்.'
'கொற்றனால் கொள்ளப்பட்டது வீடு.'
என்பன உதாரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

தான்தெரியாக் கருத்தாவினுக்குத்
'தேவதத்தன் சோற்றை அடுகின்றான்.'
என்பது உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது.

தான் தெரி கருத்தாவினுக்குக் காட்டப்பட்ட உதாரணங்களிலே கருத்தாப் பொருளைக் காட்டுதற்குரியதாகிய ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு இருக்கின்றது. ஆதலின், அவற்றுள் கருத்தாப் பொருள்கள் மற்றொன்றின் துணையானன்றித் தாமே அறியத்தக்கனவாயிருத்தலின், அவை தான் தெரி கருத்தாவாயின. தான் தெரி கருத்தாவாவது, மற்றொன்றன் உதவியினாலன்றித் தானே விளங்கி நிற்கும் கருத்தாவாம் என்று கொள்க. தான் தெரியாக் கருத்தாவினுக்குக் காட்டப்பட்ட உதாரணத்தில் அவ்விதக் குறி ஒன்றும் இன்மையால், அதில் உள்ள கருத்தாப்பொருள் 'சோற்றை' என்னும் செயப்படுபொருளும், 'அடுகின்றான்' என்னும் வினையுமாகிய இவற்றின் உதவியினால் அறியத்தக்கதாயிருத்தலின், தான் தெரியாக் கருத்தாவாயிற்று. தான் தெரியாக் கருத்தாவாவது, மற்றொன்றன் உதவியால் விளங்குவதன்றித் தானே விளங்கி நிற்காத கருத்தாவாம் என்க.

தான் தெரி கருமம், தான் தெரியாக் கருமம் என்பனவற்றிற்கும் இங்ஙனமே பொருள் கொள்க. தான் தெரி கருமத்திற்குக் காட்டப்பட்ட 'வீட்டை எடுத்தான் தச்சன்' என்னும் உதாரணத்தையும், தான் தெரியாக் கருமத்தினுக்குக் காட்டப்பட்ட 'வீடு தச்சன் கட்டினான்' என்னும் உதாரணத்தையும் ஈண்டு நோக்குக.

அவதி- ஐந்தாம் வேற்றுமை நீக்கப்பொருள். அசையாப்பொருள், நீக்கப் பொருளில் வரின், அசலம் என்னும் அவதியாம்; அசலம்-அசையாப்பொருள்.