பக்கம் எண் :
 
295

'ஊரினின்றும் போனான் தேவதத்தன்.'
'மலையினின்றிழிந்தார் முனிவர்.'

என்னும் இந்த உதாரணங்களில் நீக்கப்பொருளாய் வந்துள்ள ஊர், மலை என்பன அசையாப் பொருள்களாதலின், அசலம் என்னும் அவதி எனப்பட்டன. அசையும் பொருள், நீக்கப் பொருளில் வரின், சலம் என்னும் அவதியாம்.

'குதிரையினின்று விழுந்தான் சாத்தன்.'
'யானையினின்று இறங்கினான் கொற்றன்.'

என்னும் இவ்வுதாரணங்களில் நீக்கப் பொருள்களாய் வந்துள்ள குதிரை, யானை என்பன அசையும் பொருள்களாதலின், சலம் என்னும் அவதி எனப்பட்டன.

ஏழாம் வேற்றுமைப் பொருள்களுள் புலன் அல்லது விடயம் என்பது உரிமையாகும்.

பிரயோக விவேகம் 13-ஆம் பாட்டின் உரையில்,

'விடய முரிமை விளம்புங் காலே'.

என்றார் பிரயோக விவேக நூலாசிரியர். இஃது உரைச் சூத்திரம்.

'காட்டின்கண் புலி நின்றது.'
'கடலின்கண் மீன் திரிகின்றது.'

என்னும் இவ்வுதாரணங்களில் உள்ள காடும், கடலும் முறையே புலிக்கும், மீனுக்கும் வசித்தற்கு உரிமை உடையனவாதலின், இவை விடயஆதாரம் எனப்பட்டன. புலன், விடயம், உரிமை என்பன ஒரு பொருளன. ஆதாரம்--இடப்பொருள். பிரயோக விவேகத்து அப்பாட்டின் உரையில் காட்டப்பட்ட

'கடலுள் மீன் திரிகின்றது.'
'காட்டுள் நரி திரிகின்றது.'
'நெடும்புனலுள் வெல்லு முதலை'.
'பகல்வெல்லும் கூகையைக் காக்கை.'

என்னும் இவ்வுதாரணங்களையும் ஈண்டு நோக்குக.

அயலாதாரமாவது, உரிமையல்லாதது (அயலானது) ஆதாரமாயிருப்பது.

'ஆலின்கண் பசுக் கிடந்தது.'
'யாழின்கண் ஓசை நின்றது.'