என்னும் இவ்வுதாரணங்களில் உள்ள புலிக்குக் காடும், மீனுக்குக் கடலும் உரிமையுடையனவாயிருத்தல் போல முறையே ஆலும் யாழும், பசுவுக்கும் ஓசைக்கும் உரிமை உடையன அல்ல; ஆதலின், இவை, அயலாதாரம் எனப்பட்டன.
உபகாரகப் படலத்தின் குறிப்புரை முற்றிற்று.
************
3. தொகைப் படலம்
தொகையை வடமொழிப் புலவர் சமாசம் என்பர். தொகைக்கிலக்கணம் கூறும் ஆசிரியர் இரு திறத்தாராவர். அவருள் ஒரு திறத்தார், 'வேற்றுமை உருபும், உவமவுருபும், உம்மையும், வினைச்சொல்லீறும், பண்புச்சொல்லீறும் தொகுதலால்,
தொகையாயின', என்பர்.
இக்கொள்கையின்படி தொகை என்பதற்கு உருபு முதலியன மறைதல் என்பது பொருளாம்.
மற்றொரு திறத்தார், 'அந்த அந்தப் பொருளின்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தொகுதலால், தொகையாயின,' என்பர். இக்கொள்கையின்படி தொகை என்பதற்குச் சொற்கள் ஒன்றோடொன்று அவ்வப்பொருண்மேல் ஒற்றுமைப்படக் கூடுதல் என்பது பொருளாம்.
இவற்றுள்,வடமொழியாளர் பிற்கூறியதையே தொகை இலக்கணமாகக் கூறுவர். ஆதலின், இந்நூலாரும் பிரயோக விவேக நூலாரும் அக்கொள்கையே உடையவராவர். இவர்கள் அக்கொள்கையே உடையவர்கள் என்பதை இந்நூலாசிரியர், இப்படலத்தின் முதற்பாட்டில்,
"நாமங்க ளிற்பொருந் தும்பொருள் நற்றொகை".
என்றதனாலும்; உரையாசிரியர் அதற்கு 'ஒரு பொருளை விளக்கி நிற்கும் பெயர்ச்சொற்கள் இரண்டு சொல்லாயும், பல சொல்லாயும் பொருந்திய பொருளால் ஒரு சொல்லாய்த் தொகும்,' என்று கூறிய உரையாலும்; பிரயோக விவேக
நூலாசிரியர், பிரயோக விவேகம், சமாசப்படலம், இரண்டாம் பாட்டில்,
'ஆக்கிய சொற்கள் தகுதி, அவாய்நிலை, அண்மைநிலை
நோக்கிய மூன்றும் பெறச்சேர் வதுதொகை.'