பக்கம் எண் :
 
297

என்று கூறி, அதற்குத் 'தனிநிலைச் சொற்கள், தகுதி முதலிய மூன்றுந் தோன்ற அல்வழியாக வேற்றுமையாக அவ்வப்பொருண்மேற் பிளவுபட்டிசையாது, தம்முட்கூடுவது தொகைநிலையாம்; பிளவுபட்டு விரிந்தது தொகாநிலை,' என்று கூறிய உரையினாலும், பிறவற்றாலும் அறிதலாம்.

தமிழ்மொழியாளருள் ஒரு திறத்தார் பிற்கூறிய கொள்கையையும், ஒரு திறத்தார் முற்கூறிய கொள்கையையும் உடையராவர். தமிழ் மொழியாளருள் சேனாவரையர் கொள்கை பிற்கூறியதே. அதனைத் தொல்காப்பியம், சொல் அதிகாரம், எச்சவியல், 16-ஆம் சூத்திரத்தின் விசேட உரையில், 'வேற்றுமை உருபும், உவம உருபும், உம்மையும், வினைச்சொல்லீறும், பண்புச்சொல்லீறும் தொகுதலின், தொகையாயின என்பாரும்; அவ்வப்பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின், தொகையாயின என்பாரும் என இருதிறத்தார் ஆசிரியர். 'செய்தான் பொருள்' 'இருந்தான் மாடத்து' என உருபு தொக்கு ஒரு சொல் நீர்மைப்படாதனவும் தொகையாவான் சேறலின், அவற்றை நீக்குதற்கும்; வேழக்கரும்பு, கேழற் பன்றி என்புழித் தொக்கன இல்லை எனினும் தொகை என வேண்டப்படுமாகலின், அவற்றைத் தழுவுதற்கும்; உருபு முதலாயின தொகுதலின் தொகை என்பார்க்கும் ஒட்டி ஒரு சொல் நீர்மைப்படுதலும் தொகை இலக்கணம் எனல் வேண்டும். அதனான், உருபு முதலாயின தொகுதல் எல்லாத் தொகையினும் செல்லாமையான், எல்லாத் தொகைக்கண்ணும் செல்லுமாறு ஒட்டி ஒரு சொல்லாதல் தொகை இலக்கணமாய் முடிதலின், இவ்வாசிரியருக்கு இதுவே துணிவெனப்படும் என்பது' என அவர் கூறியதனாலறிக. இலக்கண விளக்க ஆசிரியரும் இக்கருத்து உடையவரே. அவர் கருத்தும் இதுவேயாம் என்பதனை இலக்கண விளக்கம் 334-ஆம் சூத்திரத்தானும் அதன் உரையானும் அறிக. மயிலைநாதர், சங்கர நமச்சிவாயப் புலவர், சிவஞான முனிவர், இராமானுசக் கவிராயர் முதலியோர் முற்கூறிய கொள்கையினை உடையராவர்.

இந்நூலின் இப்படலத்தின் முதற்பாட்டின் உரையிலே, ' அவ்வாறு தொகுமிடத்து வேற்றுமை அழிந்தும், ஓரோ