பக்கம் எண் :
 
298

விடத்து வேற்றுமையும் வேற்றுமைச் சார்வாகிய சொற்களும் அழிந்தும் தொகும்,' என்றது, முறையே வேற்றுமை உருபு தொக்க தொகையையும், வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையையுமாம் என்றுணர்க.

முதல் வேற்றுமையின் தொகைக்குக் காட்டப்பட்ட உதாரணமாகிய

'மார்கழி திங்கள்--மார்கழித் திங்கள்'

என்பது 'சு' என்னும் முதல் வேற்றுமை உருபு (முதல் வேற்றுமைப் பிரத்தியம்) அழிந்து தொக்கதாம் என்று கொள்க.

மேற்படி பாட்டின் உரையில் உரையாசிரியர் முதல் வேற்றுமை முதலிய ஏழு வேற்றுமைகளின் உருபு தொக்க தொகைக்கு உதாரணங் காட்டிப் பின்பு, உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கு,

'தயிரினாற் குழைத்த சோறு--தயிர்ச்சோறு'

'மருந்துகளாலாக்கப்பட்ட எண்ணெய்-மருத்தெண்ணெய்'

'சங்கரனுக்கு மகனாயுள்ள சாத்தன்--சங்கரன் சாத்தன்'

என்பவற்றை உதாரணமாகக் காட்டிப் பிறகு, " இனி, 'இடைச்சொல் அழிதொகை' என்பதும் ஒன்று உண்டு" என்று கூறி, அதற்கு,

'இருப்பைப் பாலாற் கொள்ளப்பட்ட நெய்--இருப்பை நெய்'
'பாண்டிநாட்டுக் கடலின் கரை--பாண்டிக் கரை'

என்பவற்றை உதாரணமாகக் காட்டி, "இதனை வடமொழிப் புலவர் 'மத்திம பத லோபம்' என்பர்" என்றார்.

இடைச்சொல் அழிதொகையாவது, முதன் மொழிக்கும் ஈற்று மொழிக்கும் இடையிலுள்ள சில சொற்கள் அழிந்து அவ்விருமொழியும் தொகப்பெறுவதாம் என்க.

'ஆயின், உருபும் பயனும் உடன் தொக்க தொகைக்கும் இடைச்சொல் அழிதொகைக்கும் வேற்றுமையாதோ?' எனின், உருபும் பயனும் உடன் தொக்க தொகையாவது, நிலைமொழியின்கண் அமைந்து இருத்தற்குரிய வேற்றுமை உருபும் அதன் பயனிலையாகிய வினைச்சொல்லும் அழிந்து நிற்க, நிலைமொழி வருமொழியுடன் கூடுவதாகும். இடைச்சொல் அழிதொகையாவது, முன்னிற்கு மொழிக்கும் ஈற்று மொழிக்கும் இடையில் வேற்றுமை உருபும் பயனுமாகிய இவற்றுடன் வேறு சில சொற்கள் அழிந்து நிற்க, அவ்விருமொழியும் கூடுவதாகும்,