பக்கம் எண் :
 
299

'மருந்துகளாலாக்கப்பட்ட நெய்-மருத்து நெய்'
எனற்பாலதை

'மருந்துகளாலாக்கப்பட்ட எண்ணெய்--மருத்தெண்ணெய்'
என்றது உலக வழக்கு நோக்கியது போலும்!

3-ஆம் பாட்டு:

தற்புருட சமாசமும், துவிகு சமாசமும் :

தற்புருடனாவது,வேற்றுமைத் தொகை.

வடமொழியாளர் படர்க்கை இடத்தைப் பிரதமா புருடன் எனவும், தன்மை இடத்தை உத்தம புருடன் எனவும், முன்னிலை இடத்தை மத்திமபுருடன் எனவுங் கூறுவர். தற்புருடன் என்பது, அவற்றின் வேறானதாம் என்றுணர்க.

துவிகு ஆவது, எண்ணோடு பொருள் புணர்ந்த எண் தொகையாகும். தற்புருடன் முதலிய ஆறு தொகைகளின் தமிழ்ப் பெயர்கள் இந்நூலின் 49-ஆம் பக்கத்தின் அடிக்குறிப்பில் குறிக்கப்பட்டிருக்கின்றன. அங்குத் துவிகு என்பது எண்ணோடு புணர்ந்த எண்தொகை எனத் தவறாகக் குறிக்கப்பட்டுவிட்டது. அதனை இங்குக் குறித்தபடி திருத்திக்கொள்க. துவிகுத் தொகையில் 'முன்மொழி எண்ணாகியும் பின்மொழி தத்திதார்த்தமாகியும் வரும்" என்றார் பிரயோக விவேக நூலாசிரியர். அவர் அங்ஙனங் கூறியதனைப், பிரயோக விவேகம், சமாசப்படலம், நாலாம் பாட்டையும் அதன் உரையையும் நோக்கி அறிக. துவிகுத் தொகையின் வகை இரண்டனுள் ஒருமையொப்புத் துவிகுத் தொகையாவது, ஒருமைப்பாலாகக் கொள்ளும்படி நிற்பது.

'ஆயிரந்தளி கூடின இடம்--ஆயிரத்தளி'

'பன்னிரு படலம் கூடினது--பன்னிரு படலம்'

என்பன ஒருமைப் பாலாகக் கொள்ளும்படி நிற்றலை அறிக.

பன்மையொப்புத் துவிகுத் தொகையாவது, பன்மைப்பாலாகக் கொள்ளும்படி நிற்பது.

' மூவர் கோக்கள்--முக்கோக்கள்'

என்பது பன்மைப் பாலாகக் கொள்ளும்படி நிற்றலை அறிக.

பிரயோக விவேக நூலாசிரியர் ஒருமை ஒப்புத் துவிகுத் தொகையை ஏகவற்பாவி என்றும், பன்மை ஒப்புத் துவிகுத்தொகையை அநேகவற்பாவி என்றுங் கூறுவர்.