என்றே இருத்தலாலும், உரையாசிரியர் உதாரணங் காட்டியவிடத்து 'இருமொழிப் பண்பு' என்றே கூறியிருத்தலாலும் என்க.
பிரயோக விவேகத்தில் கன்மதாரய சமாசத்தைக் கூறும் இருபத்திரண்டாம் பாட்டில்,
'முன்மொழிப் பண்பிரு பண்பு'
என்றதையும், அதன் உரையில் 'முன்மொழிப்பண்பு, இரு மொழிப் பண்பு' என்றிருப்பதையும் ஈண்டு நோக்குக. முற்பதிப்பின்கண் உரையில் 'பின்மொழிப் பண்பு' என்றே குறிக்கப் பெற்றிருந்தது. அது கைத்தவறாக நேர்ந்த பிழையேயாம் என்க.
உரையாசிரியர் இருமொழிப் பண்புக்கு, 'குறுவும் அதுவே. மையும் அதுவே எனக் குறுமை ஆயிற்று. இது பண்பு மொழியே முன்னும் பின்னும் நிற்றலால் இருமொழிப் பண்புத்தொகை' என உதாரணங்காட்டி, விளக்கமும் கூறினர். முற்பதிப்புக்காரா அதனைக் காரணங் காட்டி மறுத்து,
'கருமையும் அதுவே, செம்மையும் அதுவே - கருஞ்சிவப்பு;
சிறுமையும் அதுவே, வெம்மையும் அதுவே - சிறு வெம்மை' என உதாரணங் காட்டினர். பிரயோக விவேக நூலாசிரியர், மேற்கண்ட இருபத்திரண்டாம் பாட்டின் உரையில் "பெருவெள்ளை,' சிறுவெள்ளை, 'இன்பத்துன்பம்' எனவும்; வடமொழியில் , 'சீதோட்டணம், 'சுகதுக்கம்' எனவும் இருமொழிப் பண்பென்னும் விசேடணோபய பதகருமதாரயன் வரும்" என்றதையும் ஈண்டு நோக்குக.
6-ஆம் பாட்டு
அவ்வியபாவ சமாசமும், துவந்துவ சமாசமும்
'அவ்வியபாவ சமாசமாவது, முன்னும் பின்னும் மொழி அடுத்து வரும் இடைச்சொற்றொகை; துவந்துவ சமாசமாவது, உம்மைத் தொகை.
அவ்வியத்தொகை இரண்டனுள் முன்மொழி அவ்வியத்தொகையாவது, முன்மொழி இடைச்சொல்லாக நிற்பதாம்.
'உப கும்பம்' என்னும் தொடரில் 'உப' என்னும் இடைச்சொல் முன்னும், 'கும்பம்' என்னும் பெயர்ச்சொல் பின்னுமாக நிற்றலை அறிக.