பக்கம் எண் :
 
302

பிரயோக விவேக நூலாசிரியர் இதற்கு 'மற்றையாடை,' 'கொன்னூசி' என்பவற்றை உதாரணமாகக் காட்டினர். (பிர-23-ஆம் பாட்டின் உரை.)

பெயர் முன் மொழித்தொகையாவது, பெயர் முன் நிற்க இடைச்சொல் பின்னே நிற்பதாம்.

'சாகப்பிரதி' என்னுந் தொடரில் 'சாகம்' என்னும் பெயர்ச்சொல் முன்னும், 'பிரதி' என்னும் இடைச்சொல் பின்னுமாக நிற்றலை அறிக.

பிரயோக விவேக நூலாசிரியர் இதற்கு, 'வாண்மன்,' 'அதுமன்' என்பவற்றை உதாரணமாகக் காட்டினர். (பிர- மேற்படி.)

உம்மைத்தொகை இரண்டனுள், இதரேதரத் தொகையாவது, உயர்திணைப் பன்மையீறாய் நிற்கும் உம்மைத்தொகையாம்.

'கபிலபரணர் தங்களிலே வாது செய்தார்கள்.'

என்பதில் கபிலபரணர் என்பது இதரேதரத் தொகையாம்; அது உயர்திணைப் பன்மை ஈறாய் நிற்றலை அறிக.

பிரயோக விவேக நூலாசிரியர் இதற்கு,

'கபிலபரணர்'
'சேர சோழ பாண்டியர்'
'இராம லட்சுமணர்'

என உதாரணங் காட்டினர். (பிர-மேற்படி.)

சமாகாரத் தொகையாவது, அஃறிணை உம்மைத்தொகையாம்.

'உவாவும் பதினான்கும்-உவாப் பதினான்கு'
'நெய்யும் எண்ணெயும் - நெய்யெண்ணெய்'
'நாளும் பக்கமும் - நாட்பக்கம்'

என்னுஞ் சமாகார உம்மைத்தொகைகள் அஃறிணையாய் நிற்றலை அறிக.

பிரயோக விவேக நூலாசிரியர் இதற்கு,

'அறம் பொருள்'
'புலிவிற் கெண்டை'

எனத் தமிழ்த் தொடரையும், 'சங்க படகம்' என்னும் வடமொழித் தொடரையும் உதாரணங் காட்டினர்.