பக்கம் எண் :
 
307

உகரத்திற்கு அகரம் ஆதேசமாக்கிப் 'பாண்டவன்' என முடிக்க.

'அத்தி' என்று வைத்து, அன் என்னும் பிரத்தியத்தாற்கடை குறைத்து, ஒரு தகர வொற்றை ஆகமமாக்கி, முதற்கண் நின்ற அகரத்தினுக்கு விருத்தியாக்கி, 'ஆதித்தன்' என்றலுமாம்.

'தனு' என்று வைத்து, இவன் மகன் யாவன் எனக் கருதின பொழுது வன் என்னும் பிரத்தியத்தால் இறுதி உகரத்தை அகரமாக்கி, முன்பு நின்ற அகரத்தினுக்கு விருத்தியாக்கித் 'தானவன்' என்று முடிக்க.

இவ்வண்ணம் 'மனு' என்று வைத்து, இவன் மகன் 'மானவன்' என்று முடிக்க.

'சிபி' என்று வைத்து, இவன் மகன் யாவன் எனக் கருதின பொழுது அன் என்னும் பிரத்தியத்தால் மகரவொற்றை நடு ஆகமமாக்கி, முதல் இகரத்திற்குக் குணமாக்கிக் குறுக்கிச் 'செம்பியன்' என முடிக்க. (குணமாக்குதல்--குணசந்தியாக்குதல், சி என்பதனைக் குணமாக்கினால் சே என்றாம். ஆதலின், 'குணமாக்கிக் குறுக்கி' என்றார்.)

14. இவளுக்கு மகன்

'விநதை' என்று வைத்து, இயனப் பிரத்தியத்தால் (இயன் என்னும் பிரத்தியத்தால்) கடை குறைத்து, முதற்கண் நின்ற விகரத்தினுக்கு விருத்தியாக்கி 'வைநதேயன்' என முடிக்க.

முன்பு நின்ற விகரத்தினுக்கு வயினனென்பது ஆதேசமாக்கி (இங்கு வயின என்பதை ஆதேசமாக்கி என்றிருத்தல் வேண்டும் போலும் !) 'வயினதேயன்' என்று மற்று முடிப்பாருமுளர். அவனாவான் கருடன் என்றறிக.

'தாரை' என்று வைத்து, இவள் மகன் யாவன் எனக் கருதின பொழுது ஏயனப் பிரத்தியத்தால் கடை குறைத்துத் 'தாரேயன்' என முடிக்க. அவனாவான் அங்கதன்.

இவ்வண்ணம் 'கங்கை' என்று வைத்துக் 'காங்கேயன்' என்று முடிக்க.

'திதி' என்று வைத்து, இவள் மகன் யாவன் எனக் கருதின பொழுது அன் என்னும் பிரத்தியத்தால் முன்பில் தகாரத்திற்கு விருத்தியாக்கி, ஒரு தகாரவொற்றுக் கொடுத்துத் 'தைத்தியன்' என்று முடிக்க.