15. இந்த வர்க்கத்தான்
'குரு' என்று வைத்து, அவன் வர்க்கத்தார் யாவர் எனக் கருதின பொழுது முதல் உகரத்திற்கு விருத்தி ஆக்கி, அனப்பிரத்தியத்தால் கௌரவர் என முடிக்க. இஃது ஆய்தற்குரியது.
16. இவனைத் தெய்வமாக உடையான்
'சிவன்' என்று வைத்து, இவனைத் தெய்வமாகக் கொள்வான் யாவன் எனக் கருதின பொழுது 'சு'ப்பிரத்தியத்தால் ஆதிவிருத்தி ஆக்கிச் 'சைவன்' என முடிக்க.
இவ்விலக்கணத்தால் 'பசுபதி' என்றலும் அமையும்.
7 - ஆம் பாட்டு
இப்படலத்தின் ஏழாம் பாட்டின் உரையில் 'வடமொழியின் எழுத்தடைவில் கவ்வென்னு முதல் வியஞ்சனம், முப்பத்தொன்றாம் மெய் தனக்கு முன்னே வரின், இரட்டித்துத் 'தமிழில் இல்லன போம்' என்னும் இலக்கணத்தால் மேலிட்ட முப்பத்தோராமெய் அழியும்' என்றார். அதற்குதாரணம்:
பரிஷ்காரம் - பரிக்காரம்
பரிஷ்காரம் என்னும் சொல்லில் வடமொழியின் முப்பத்தொன்றாம் மெய்யாகிய ஷகரம் முதல் மெய்யாகிய ககரத்திற்கு முன் வந்தமையின், அது கெட்டு முதல் மெய் இரட்டித்துப் 'பரிக்காரம்' என்றாயிற்று எனக் கொள்க.
'வடமொழியில் எழுத்தடைவில் கவ்வென்னு முதல் வியஞசனம் முப்பத்தொன்றாம் மெய் தனக்குப் பின்னே வந்து முப்பத்தைந்தாய் நிற்பின், 'தமிழில் இல்லன போம்' என்னும் இலக்கணத்தால் மேலிட்ட முப்பத்தோராமெய் அழியும்' என்றார். அதற்குதாரணம் :
தக்ஷன் - தக்கன்
வடமொழியின் முப்பத்தைந்தா மெய்யாகிய க்ஷகரம், முதன்மெய்யாகிய ககரத்தின் பின்னே முப்பத்தோரா மெய்யாகிய ஷகரம் வந்து அதனுடன் சேர உண்டாகும் எழுத்தாகும்; ஆதலின், தக்ஷன் என்பது, அதில் உள்ள முப்பத்தோரா மெய்யாகிய ஷகரம் கெட்டு, முதன் மெய்யாகிய ககரம் இரட்டித்துத் 'தக்கன்' என்றாயிற்று எனக்கொள்க.