பக்கம் எண் :
 
309

அப்பாட்டின் உரையில் பக்கம், தக்கன், இயக்கன் என்னும் உதாரணங்கள் முன்னும்; பரிக்காரம், நிக்காரம் என்னும் உதாரணங்கள் பின்னுமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், அப்பாட்டின் உரையிற் கூறப்பட்ட விதிகளின் முறையின்படி பரிக்காரம், நிக்காரம் என்னும் உதாரணங்களை முன்னும், பக்கம், தக்கன், இயக்கன் என்னும் உதாரணங்களைப் பின்னுமாகக் கொள்ளுதல் வேண்டும் என்றறிக.

முப்பதாம் மெய் ஷ ;
முப்பத்திரண்டாம் மெய் ஸ;
முப்பத்து மூன்றாம் மெய் ஹ ஆகும்.

தத்திதப் படலத்தின் குறிப்புரை முற்றிற்று.

5. தாதுப் படலம்

இவர் 'தாது' என்றது தெரிநிலை வினைப்பகுதியை என்றறிக. இது வடமொழியாளர்களின் கொள்கையாகும். இப்பகுதிகளை ஏவல் ஒருமை வினைமுற்றுப் போலத் தோற்றுவித்துக் கொள்ளவேண்டும் என்பது இந்நூலாசிரியர் கருத்து. அங்ஙனம் கொள்ளவேண்டும் என்பது இந்நூலாசிரியர் கருத்தாம் என்பதனையும், அது வடமொழியாளர் கொள்கையாம் என்பதனையும், இப்படலத்தின் முதற்சூத்திரத்தையும், அதற்கு உரையாசிரியர் கூறிய உரையையும், விசேட உரையையும் கண்டறிக.

பிரயோக விவேக நூலாசிரியர் திங்ஙுப் படலம், முதற்பாட்டில்,

'முன்னிலை யேவ லொருமைச்சொற் போலு முதனிலைகள்
இன்னிலைத் தாது பகுதியென் றாகும்.'

என்றதனையும், அதற்கு அவர் கூறிய உரையையும் ஈண்டு நோக்குக.

தமிழ் நூலாசிரியர்களின் கருத்துமிதுவே. தமிழ் நூலாசிரியர்களின் கருத்துமிதுவே என்பதனை, நன்னூலாசிரியர், பதவியலிற் பத்தாஞ் சூத்திரத்தின் ஈற்றில்,

'செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே'

என்றதனாலும் அதன் உரைகளாலும் அறிக.