இனி, இந்நூலின் உரையாசிரியர், அம்முதற்பாட்டின் விசேட உரையில், 'சர' என்னும் தாதுவின் பொருட்போலியும், 'பச' என்னுந் தாதுவின் பொருட்போலியும் போல, நட என்பதும், அடு என்பதுமாம். அப்பரிசே கிடந்தன எண்ணிறந்த தாதுக்கள் உளவாதலால், தமிழினுக்கும் நட, அடு என்னும் இவை முதலாகிய தாதுவாய், அவை முன்னிலையிடனில் ஏவற்பொருளில் ஒருமைப்பொருட்போலி போன்றன. நட என்பது ஒருவனை நட என்றும், அடு என்றது ஒருவனை அடு என்றும் ஏவினாற் போன்றது. அதற்குக் காரணம் என்னை எனின், சுவ்வென்னும் பிரத்தியத்தான் முடிந்தாலல்லது நடப்பது அடுவதான பொருள்களைப் பயவா; அப்பொருள் போன்றிருப்பது மாத்திரமே என்க' என்றதன் கருத்து, அந்நிலையில் அப்பகுதிகளுக்குப் பொருள்களின் புடை பெயர்ச்சியை உணர்த்தும் தன்மை இன்று என்பதேயாகும்.
இந்நூலின் உரையாசிரியர், அந்நிலையில் அப்பகுதிகள் நால்வகைச் சொற்களில் இன்ன சொல்லாகக் கொள்ளற்குரியனவாம் என்பதனைக் கூறிற்றிலர். சேனாவரையர் அப்பகுதிகளைப் பெயர்ச்சொல்லாகக் கொண்டனர். அவர் அவற்றைப் பெயர்ச்சொல்லாகக் கொண்டனர் என்பதனைத் தொல்காப்பியம், சொல்லதிகாரத்தின்,
'வினையின் றொகுதி காலத் தியலும்'
என்னும் (415-ஆம்) சூத்திரத்தின் விசேட உரையில், 'காலமுணர்த்தாது வினைமாத்திரமுணர்த்தும் பெயர், நிலப்பெயர் முதலாகிய பெயரொடு தொக்குழிக் காலமுணர்த்தியவாறு கண்டுகொள்க' என்றதனாலறிக. காலமுணர்த்தாது வினைமாத்திரம் உணர்த்தும் பெயர் தொழிற்பெயராம் எனக் கொள்க. அவற்றை வினையாலணையும் பெயரெனின், வினையாலணையும் பெயர் காலமும் உணர்த்துமாகலானும், பகுதியளவாய் நிற்பனவல்லவாகலானும் வினையாலணையும் பெயரென்னலாகாதென்க.
சிவஞான முனிவர் எல்லா வினையடிகளும் பிறத்தற்கு மூலமாகிய பொது முதனிலையை முதனிலைத் தனிவினைப் பெயர் என்பர். அதனை, நன்னூல், பதவியல், 'நடவா மடிசீ' என்று தொடங்கும் (10-ஆம்) சூத்திரத்தின் விசேட உரையில்