பக்கம் எண் :
 
311

'இங்ஙன முதனிலை புடைபெயர்தலே வினையாதலின், எல்லா வினைச்சொற்களும் பிறத்தற்கு மூலமாகிய பொது, முதனிலைத் தனி வினைப் பெயரென்றே கொள்க. அதனைப் படுத்தலோசையாற் கூறிக் காண்க' என்று கூறியதனாலறிக.

இலக்கணவிளக்க நூலாசிரியரும் அவற்றைப் பெயராகவே கொண்டனர். அதனை இலக்கண விளக்கம், பதவியல் 'நடவாமடிசீ' என்னும் ஆறாம் சூத்திரத்தின் விசேட உரையில் 'இயல்பு, உயிரும் ஒற்றும் குற்றுகரமுமாகிய இருபத்து மூன்றீற்றவாகிப் படுத்தலோசையான் அச்செய்கைமேற் பெயர்த்தன்மைப்பட்டு வினைமாத்திரையே உணர்த்தி நிற்குந் தன்மை' என்றதனாலறிக.

இனிச் சேனாவரையர் தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமை இயலின்,

'பெயரி னாகிய தொகையுமா ருளவே
அவ்வு முரிய வப்பா லான.'

என்னும் ஆறாம் சூத்திர உரையில், பெயரும் பெயருந் தொக்கு எழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கோடற்குக் காட்டிய 'யானைக் கோடு கிடந்தது', 'மதிமுகம் வியர்த்தது' என்பன முதலிய உதாரணங்களோடு 'கொல்யானை நின்றது' என்பதனையும் உதாரணமாகக் காட்டியிருத்தலையும்; பிரயோக விவேக நூலாசிரியர், பிரயோக விவேகம், திங்ஙுப்படலம், முதற்பாட்டின் உரையில், 'முன்னிலை ஏவல் ஒருமைச் சொற்போலும் நட, வா, மடி, சீ என்று நன்னூலிற் கூறிய முதனிலைத் தொழிற் பெயர்கள், தாது எனவும், பிரகிருதி எனவும் பெயர் பெறும்,' என்றதையும்; விசேட உரையில்; 'முன்னிலை யேவலொருமைச் சொல்லாகும்,' என்னாது, 'போலும்' என்றது. முதனிலை என்னுந் தாதுக்களும் வேறே; முன்னிலை ஏவலொருமைச் சொற்களும் வேறே என்பது அறிவித்தற்கு என்க. 'என்னையோ?' எனின், நட, வா முதலிய தாதுக்கள் நடத்தல், வருதல் எனப் பொருள்பட்டு, ஐம்பால் மூன்றிடத்திற்கும் பொதுவான தொழிற்பெயராய் நின்று, பின் காலங் காட்டும் இடைநிலை எழுத்துக்களோடு வரும் விகுதிகளை அடைந்து, நடந்தேன், நடந்தாய், நடந்தான் என வரும்' என்றதையும் ஈண்டு நோக்குக.

இந்நூலாசிரியர் இப்படலத்தின் இரண்டாம் பாட்டில் சில பகுதிகளைக் கூறி,