பக்கம் எண் :
 
314

வர்க்கு ஒரு கருத்தனையும்; செய்வி என்னும் வாய்பாடுகள், ஏவல் வினை முதல் இரண்டையும், இயற்றும் வினைமுதல் இரண்டையும், மூவருள் இருவர்க்கு ஒரு கருத்தனையும்; செய்விப்பி என்னும் வாய்பாடுகள், ஏவல் வினைமுதல் மூன்றையும், இயற்றும் வினை முதல் மூன்றையும், நால்வருள் மூவர்க்கு ஒரு கருத்தனையும் தரும் என்பார் 'ஈரேவல்' என்றுங் கூறினார்" என்றதை ஈண்டு நோக்குக,

"சாத்தன் பொன்னனை நோக்கி,'பொன்னா ஆடு' எனப் பொன்னன் ஆடினான்" என்பது தோன்றும். இதில் சாத்தன் பொன்னனை ஆடும்படி ஏவினவனாதலின், சாத்தன் ஏவுதற் கருத்தா; பொன்னன் ஆடுதல் தொழிலைச் செய்தவனாதலின், இயற்றுதற் கருத்தா; ஆதலின், செய்யென்னேவலில் இருவருள் ஒருவர்க்கு ஒரு கருத்தன் உளனாதலை அறிக. 'சாத்தன் கொற்றனால் பொன்னனை ஆடுவித்தான்' என்பதில் சாத்தன் 'பொன்னனை ஆட்டு' எனக் கொற்றனை ஏவக் கொற்றன் பொன்னனை 'ஆடு' என ஏவப் பொன்னன் ஆடினான் என்பது தோன்றும். இதில் சாத்தன் கொற்றனை ஏவக் கொற்றன் பொன்னனை ஏவினான் ஆதலின்,ஏவும் வினைமுதல் இரண்டாயின எனவும்; சாத்தன் பொன்னனை ஆட்டு எனக் கொற்றனை ஏவக் கொற்றன் பொன்னனை ஏவுதலாகிய தொழிலை இயற்றினான்; பிறகு கொற்றனது ஏவுதலால் பொன்னன் ஆடுதலாகிய தொழிலை இயற்றினான்; ஆதலின், இதில் இயற்றும் வினைமுதலும் இரண்டாயின எனவும்; இதிற் குறித்த ஆட்டு என்ற செய்வி என்னும் வினையின்கண் அமைந்த இயற்கை வினைப்பகுதியாகிய ஆடு என்பதனாற் குறிக்கப்பட்ட ஆடுதலாகிய தொழிலைச் செய்தவன் பொன்னனாதலின், மூவருள் இருவருக்கு ஒரு கருத்தனாயினான் எனவும் அறிந்துகொள்க. இங்ஙனமே செய்விப்பி என வரும் வாய்பாட்டு வினைகளின் கருத்தாக்களையும் ஆய்ந்து கொள்க.

இவை யாவும் ஒருமை ஏவல் வினைக்கும் பொருந்துமாயினும், ஈண்டு இவை பகுதிகளைக் குறித்துக் கூறியனவாம் எனக் கொள்க.

நன்னூலார் இங்ஙனம் வரும் பகுதிகளை, 'செய்யென்வினைவழி விப்பித் தனிவரின்' என்னுஞ் சூத்திரத்தானும்,