மற்றை வினைகளில் இங்ஙனம் வரும் பகுதிகளை 'விளம்பிய பகுதிவே றாதலும் விதிமேல்' என்னுஞ் சூத்திரத்தானுங் கூறினார். இந்நூலாசிரியர் அவ்விரு பகுதிகளையும் ஒன்றாகவே கொண்டு கூறினார்.
இந்நூலாசிரியர் 'காரிதம்' என்றது இயல்பாகிய ஏவலின் மேல் ஓரேவல் வருவனவற்றை; 'காரிதக் காரிதம்' என்றது அவ்வியல்பாகிய ஏவலின்மேல் இரண்டு ஏவல் வருவனவற்றை என்றறிக.
பின் உரையாசிரியர் 'ஒரு சார் கருத்தாவையும், கருமத்தையும் வேறு படுக்குமிடத்தும் கேவலக் கருத்தா, காரிதக் கருத்தா, காரிதக் காரிதக் கருத்தா எனவும்; கேவலக் கருமம், காரிதக் கருமம், காரிதக் காரிதக் கருமம் எனவும் வரும்' என்று கூறி, உதாரணம்:-- 'உண்டனன், ஊட்டினன், ஊட்டுவித்தனன் எனவும், உண்டது சோறு, ஊட்டினது சோறு, ஊட்டுவித்தது சோறு எனவும் கொள்க' என்றார்.
இவற்றுள், முதலில் உள்ளவற்றோடு கருத்தாவைக் கூட்டி, உண்டனன் என்பது முதலிய மூன்றும் மேற்கூறிய மூவகைக் கருத்தாக்களை அறிவித்தற்குக் காட்டிய உதாரணங்களாம் எனவும், உண்டது சோறு என்பது முதலிய மூன்றும் மூவகைக் கருமங்களை அறிவித்தற்குக் காட்டிய உதாரணங்களாம் எனவும் உணர்க. மூவகைக் கருமங்களை அறிவித்தற்குக் காட்டிய உதாரணங்களைச் செயப்படுபொருள் சேர்த்துக் காட்டினார். மூவகைக் கருத்தாக்களை அறிவித்தற்குக் காட்டிய உதாரணங்களைக் கருத்தாக்களைச் சேர்க்காமல் காட்டினார்; ஆதலின், அவற்றோடு அம்மூவகைக் கருத்தாக்களையுஞ் சேர்த்துக்கொள்க.
'பொன்னன் உண்டனன்' என்றால், இதில் பொன்னன் கேவலக் கருத்தா எனவும்; 'கொற்றன் பொன்னனை ஊட்டினன்' என்றால், இதில் பொன்னன் கேவலக் கருத்தா; கொற்றன் காரிதக் கருத்தா எனவும் : 'சாத்தன் கொற்றனால் பொன்னனை ஊட்டுவித்தனன்' என்றால், இதில் பொன்னன் கேவலக் கருத்தா, கொற்றன் காரிதக் கருத்தா, சாத்தன் காரிதக் காரிதக் கருத்தா எனவும் அறிக.