பக்கம் எண் :
 

    சா : தாங்களும் வாருங்கள் என்பதில் தாங்கள் என்னும் மூவிடப்
பெயர் முன்னிலைக்கு மட்டுரித்தாயிற்று. (அவர்தாம் வந்தார்-என்பது
துணைப் பெயர்த்தன்மை.)  ‘இச்செயல் வெற்றியின்றேல் நான் தமிழ் மகன்
இல்லை’ என்று தன்னைப் படர்க்கையாய் அழைப்பதும்; அரசரும்,
துறவியரும் யாம் வருவோம் எனப் பன்மையில் மொழிதலும் வழக்குரிமை.

275. நூ: ஓருயர் வோடியை ஒன்றுக்(கு) உயர்வினை.

    பொ: ஓர் உயர்திணைப் பொருளொடு அஃறிணைப் பொருள் ஒன்று
இயைந்துவரின் உயர்திணை வினைபெறும்.

    சா: முருகனும் மயிலும் வந்தனர்.  நாயும் நம்பியும் வந்தனர். 
சிறப்பொடு பூசனை செல்லாது என ஒடு உருபுபிணைய வருவது இயல்பாய்
ஒன்றன் வினையே பெறும்.  இப்பொருட்டாய (377) நன்னூல் நூற்பாவுக்குப்
பிறிது பொருள் உரைப்பர்.

    ஒரு திணை பலபொருள்வரின் பெரும்பால் பற்றி (279) அவ்வினையே
பெறுவது உணர்க.

276. நூ: முன்னிலை சார்படக் கையும்முன் வினைபெறும்

    பொ: முன்னிலை சார்ந்த படர்க்கையும் முன்னதன் வினையே பெற்று
நிற்கும்.

    சா: நீயும் அவனும் செல்லுங்கள்.  நீங்கள் இருவரும் வாருங்கள் என
முன்னிலைப்பன்மை படர்க்கை வினை பெறுவது என் எனின், நீயும் அவனும்
என்று உளப்பாட்டு நிலையும் பன்மையாதலின் அவ்வாறு முடிந்தது. நீயிர்
இருவீரும் வருதிர் என்பது பண்டை வழக்கு ‘முன்னிலை வினைபெறும்’
எனாது முன்வினைபெறும் என்றமையின், யாம் இருவேம் என்பது நாம்
இருவர் எனத் திரிந்ததும், நானும் நீயும் செல்வோம் எனத் தன்மையொடு
பட்ட முன்னிலை தன்மை வினை பெறுவதும் கொள்க.

காலம்

277. நூ: விரைவு பற்றிக் காலம் தவறும்.

    பொ: விரைவுணர்ச்சிப் பற்றிக் காலந்தடுமாறிவரும்.

    சா: உடனழைத்துச் செல்பவன் வந்து வாயிலில் அழைக்க உடை
உடுத்தியவாறே வந்துவிட்டேன் என்பதும் வருகிறேன் என்பதும்
காலவழுவமைதி.  மற்று, நாங்கள் இளம்பருவத்தில் விளையாடுவது,
(விளையாடுகிறது) இத்திடலில்தான் என்பனவும், பணம் இருந்தால் படம்
எடுத்ததுபோல்தான் என்பதும் தொடரமைப்பாலும் துவ்விறுதித்
தொழிற்பெயராலும் தோன்றின என்க.