பக்கம் எண் :
 
278

278. நூ: ‘முக்காலத்தினும் ஒத்தியல் பொருளைச்
        செப்புவர் நிகழும் காலத் தானே’

பொ: முக்காலத்திலும் ஒரு தன்மையோடு இயலும் பொருள்களை
நிகழுங்கால வாய்பாட்டாற் கூறுவர்.

    சா: உலகம் உருள்கிறது, ஆறு ஓடுகிறது, மலை நிற்கிறது, காற்றுவீசும்,
தீசுடும் முதலியன.

    ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ என்னும் நூற்பாவையும்
இதனுள் அடக்கி மெய் உளது, பொய் இலது, நீர்தண்ணிது,
என்பனவற்றையும் உணர்க.

அலி -  முடிபு

279. நூ: அலித்தனத் தாருள் பேடன் பேடி
        ஆண்பெண் வினையுறும்; ஒன்றன் ஈறுமாம்.

    பொ: இருபாலும் அல்லாத தன்மையருள் ஆண்மைவிஞ்சிய
பேடனையும், பெண்மை விஞ்சிய பேடியையும் அவ்வத்தன்மை மிகுதியால்
ஆண், பெண் வினையடையும்.  அன்றி ஒன்றன் பாலீறு முடிவும் பெறும்.

    சா: பேடன் வந்தான்; பேடி வந்தாள்.  பேடன் வந்தது; பேடி வந்தது. 
மகண்மா முதலிய பிற சொற்களைப் பொருள் தந்து இவற்றுளடக்குக.  பேடு,
அலி பொதுத்தன்மையன.  அலித்தனம் (ஒப்பு) குடித்தனம்
இயல்பில்லாமையின் கடவுள் அருள்வார், கடவுள் உள்பொருள் என்னும்
வழக்கை இங்கேற்க.

மரபு

280. நூ: ‘எப்பொருள் எச்சொலின் எவ்வா றுயர்ந்தோர்
        செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே’

    பொ: எப்பொருளை எச்சொல்லால் எம்முறையில் சான்றோர்
குறித்தனரோ, அவ்வாறு குறித்தல் மரபு.

    சா: மாட்டுச் சாணம்; ஆட்டுப் புழுக்கை; கழுதை வட்டை முதலவும்,
தேர்வலவன், யானைப்பாகன், ஆட்டிடையன் முதலவும், பனை ஓலை, அரசு
இலை, தாழை மடல் முதலவும் தொடர்தல்.  மரபு என்றது இங்குச் சொல்
மரபு.

281. நூ: மருவ வரும்புது வரவும் மரபே.

    பொ: பண்டைய படிந்த மரபேயன்றி நிலைபெறுமாறு புதிதாய்த் தழுவி
வருவதும் மரபேயாகும்.

    மரபு என்பது நிலை பெறுந்தன்மையதாய பழமையொடு
அத்தன்மைத்தாய புதுமையும் அவ்வாறு அமைத்துக்கொள்வதே என்பது.