பக்கம் எண் :
 

    யாண்டு (யாண்டு பலவாக) ஆண்டு

யார் - ஆர்; நான்ஆர்
யானை - ஆனை (முதல் நிலைத் தமிழ்ப் பாடநூல்)
யாக்கை - ஆக்கை (வைக்கோல் புரி)
யாமை - ஈற்றியாமை; ஆமை
யாறு - ஓடம்போக்கியாறு; ஆறு
யாடு - பல்யாட்டினநிரை; ஆடு
யசோதை - அசோதை என்பன போல்வன -
பிறமொழி ஒலி பெயர்ப்புட்படும் யம்முதல் தமிழ்சொல் இன்மைமாற்றம் இதனுள் அடங்காது.
யாழ் - ஆழ் என்பது வழக்காய்த் திரிதலாகாது
யாப்பு - ஆப்பு எனப் பிறிதொரு சொல் முன் வழக்குளது மாறாது.
ஆளி - யாளி
யாமம்  - சாமம்
எனத்திரிதல் சிறுபால்.

320. நூ: கிகர உயிர்மெய் தவிர்சொல் வழக்கில்
        கிகர முதலாய் எதிரொலிப் படல்வழு

    பொ: கிகர உயிர் மெய் முதலாகிய சொல்லல்லாத சொற்கள் வழக்கில்
முதலெழுத்து, ககரமாய் மாறிப்பிற வெழுத்துகளை உள்ளாகக்கூட்டி ஒலிக்கும்
எதிரொலிச் சொன்முறை வழுவே.

    பாய்கீய் இருக்கிறதா?  தந்து கிந்து போகச் சொல்லுங்கள்? என்பன
வழக்கு.  இப்பிழை வழக்கு பாயோடு தலையணையைச் சேர்த்துக்
கொடுத்தலும், கொடையொடு இன்சொலும் குறிப்பதேனும் இம்முறை
நேரிதன்மையின் பிழையே.  மற்று தோட்டம் துரவு, போகவர, வரவுசெலவு,
எதுகைமோனை முதலான ஒலி நயம் நோக்கி அமைந்த சொற்களும்,
ஆட்டபாட்டம், குற்றநற்றம் என முதற்சொல் நோக்கித் திரிந்த இரண்டாம்
சொல் இயைபுகளும் ஒருவாற்றான் ஈண்டே அமைக்கலாம்.  ஆயின் நன்மை
தின்மை போலும் பிழை வடிவங்கள் நீக்கற்பாலன.  நந்தனார் - கிந்தனார்
எனமாற்றிய கலைவாணர் கிருட்டினன் தன் பெயரை அதுபோல்
மாற்றலாகாதென நகையாடியதறிக.

ஊர்ப்பெயர் மருவு

321. நூ: ஊர்ப்பெயர் சுருங்கி மருவும் போதில்
        மூன்றிரண்(டு) எழுத்துமேல் ஐபெறும் பெரிதும்.